பரபப்பான அரசியல் சூழலில் விஜயகாந்தை ரஜினிகாந்த் சந்தித்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில் எதற்காக இந்த சந்திப்பு என்பதை ரஜினிகாந்த் தெளிவாக விளக்கியுள்ளார்.

 

மக்களவை தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது தேமுதிக. தொகுதி உடன்பாடு ஏற்படாததால், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணையுமாறு  விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்தார். இதனால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்தை சந்திக்க ரஜினிகாந்த் செல்ல இருப்பதாக கூறப்பட்டது.

 

பாஜக கூட்டணியில் விஜயகாந்தை இணைய வலியுறுத்தவே அக்கட்சியின் தலைவர்கள் ரஜினிகாந்தை அனுப்பியதாக தகவல்கள் பறந்தன. இந்நிலையில் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘’நான் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது முதல் ஆளாக விஜயகாந்த் என்னை வந்து பார்த்து நலம் விசாரித்தார். நான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றபோது முதல் ஆளாக போன் செய்து நலம் விசாரித்தவர் நண்பர் விஜயகாந்த்.

நல்ல மனிதர். சிறந்த நண்பர். ஆகையால்தான் இப்போதுப் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன். இதில் அரசியல் பற்றி உண்மையாகவே எதுவும் பேசவில்லை. அரசியலில் எனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்து விட்டேன்’’ என அவர் தெரிவித்தார். இந்தன் மூலம், விஜயகாந்தை சந்திக்க பாஜக அனுப்பி வைப்பதாக கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினி.