vijayakanth will back with bang says premalatha

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில், ஆர்கே நகர் இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார் என அவரது மனைவி பிரேமலதா கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதை அனைவரும் கவனித்து வருகிறார்கள். ஆனால், அதற்கான முடிவு மத்திய அரசு எடுக்காமல் இருக்கிறது.

நதிநீர் இணைப்பு, கச்சத்தீவு மீட்பது, காவிரி மேலாண்மை அமைப்பது என அனைத்தும் மக்களின் நன்மைக்காகவே வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு முதலில் அனுமதி அளித்தது, திமுக ஆட்சியில்தான். இதை மு.க.ஸ்டாலினே ஒப்பு கொண்டுள்ளார்.

ஆர்கே நகர் இடைத் தேர்தலில், பணப்பட்டுவாடா தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். பணத்தை கொடுத்து ஜனநாயகத்தை வாங்க பார்க்கிறார்கள்.

விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடத்தப்படும். அப்போது, தேமுதிக தனது முழு பலத்தை காண்பித்து, விஸ்வரூபம் எடுக்கும்.

தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். ஆர்கே நகர் பிரச்சாரத்தில் விரைவில் விஜயகாந்த் கலந்து கொள்வார். வேட்பாளர் மதிவாணனுக்கு ஆதரவு திரட்டி, வாக்கு சேகரிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.