Vijayakanth who traveled to the city bus

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தொண்டர்களுடன், சென்னை மாநகர பேருந்தில் ஆலந்தூரில் இருந்து போராட்டம் நடைபெறும் பல்லாவரத்துக்கு இன்று மதியம் பயணம் செய்தார். விஜயகாந்த் பேருந்துவில் பயணம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 19 ஆம் தேதி அன்று பேருந்து கட்டணத்தை தமிழக அரசு இரண்டு மடங்காக உயர்த்தியது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக அரசின் கட்டண உயர்வை திருமப்ப்பெறக்கோரி, பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். கட்டண உயர்வை திரும்ப பெற மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறி வந்தது. இந்த நிலையில், 5 ரூபாய் இருந்த கட்டணம் 4 ரூபாய் அதாவது 1 ரூபாய் குறைத்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இது வெறும் கண்துடைப்பு நாடகமே என்று எதிர்கட்சிகள் கூறியிருந்தன.

இதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று மறியலில் ஈடுபட்டனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்தரசன், மதிமுகவைச் சேர்ந்த வைகோ உள்ளிட்ட பலர் இன்று கைது செய்யப்பட்டனர்.

தேமுதிக சார்பில், இன்று போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகாந்த் கூறியிருந்தார். அதன்படி, பல்லாவரத்தில் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று மதியம், விஜயகாந்த் தலைமையில், தொண்டர்கள் ஆலந்தூர் வந்தனர். இதன் பின்னர், மாநகர பேருந்து மூலம் போராட்டம் நடைபெறும் பல்லாவரத்துக்கு சென்றனர். அப்போது, தன்னுடன் வந்த தொண்டர்களுக்கு விஜயகாந்தே பயணச்சீட்டு எடுத்தார். பேருந்து நடத்துனரிடம் 500 ரூபாய் கொடுத்து தொண்டர்களுக்கும் பயணச் சீட்டு எடுத்தார். மாநகர பேருந்தில் விஜயகாந்த் சென்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.