விஜயகாந்த் உடல்நலம் குறித்து தொடர்ந்து கவலையான தகவல்கள் பரவி வந்த நிலையில் பழைய ஃபார்முக்கு திரும்பி அவர் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருவதும், கட்சி தலைவர்களை சந்தித்து வருவதும் கேப்டனின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

சிங்கமாக முழங்கி வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியதால் சிங்கப்பூருக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். அவரது உடல்நலம் அப்போதும் குணமடையாததால் அவரது கட்சி நிர்வாகிகளிடையே சுணக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர் மீண்டும் இந்தியா திரும்பிய அவர் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மனைவி பிரேமலதாவுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து கடந்த 16ம் தேதி அதிகாலை 3 அளவில் சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அதிகாலை சென்னை திரும்பினாலும், 10 மணி நேரத்திற்கு பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு மேல் விமான நிலையத்தை விட்டு விஜயகாந்த் வெளியே வந்தார். அப்போது அவரது உடல்நலம் தேறாததால் 10 மணி நேரம் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 

முழுமையாக குணமடையாத விஜயகாந்த்தை தேர்தலுக்காக இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டனர் என பேச்சுகள் பரவின. இதனையடுத்து தேர்தல் கூட்டணி குறித்து பேச பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ்கோயல், பாஜக மூத்த தலைவர் முரளிதர ராவ் ஆகியோர் விஜயகாந்த வீட்டிற்கு சென்று சந்தித்தனர். அவர்களை எழுந்து நின்று வரவேற்கக் கூடிய நிலையில் கூட விஜயகாந்த் இல்லை. நிதானமாக இல்லை எனக் கூறப்பட்டது. அவர்கள் சந்தித்த போது வெளியான புகைப்படங்களும் விஜயகாந்தின் உடல்நலம் குறித்த சந்தேகத்தை கிளறியது. 

இந்நிலையில், இன்று விஜயகாந்த் தனது கட்சியினரை சந்தித்து கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அடுத்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது விஜயகாந்த் உடல் நலம் ஆரோக்கியத்துடன் கலந்துரையாடினார். உற்சாகத்துடன் அவர் சில பேப்பர்களை படித்தார். அந்தப்புகைப்படங்களும் வெளியாகின. தற்போது பழைய ஃபார்முக்கு விஜயகாந்த் திரும்பி விட்டதால் அவரது தொண்டர்களும், உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.