தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி அப்பகுதி மக்கள் 100 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில், 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று தேமுதிகவும், கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அப்போது பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், கதிராமங்கலம் போராட்டத்தில் தேமுதிக துணை நிற்கும் என்று கூறினார். நான் இங்கு பிரச்சனையைத் தூண்டி விட வரவில்லை என்று கூறினார்.

மேலும், கதிராமங்கலம் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

முன்னதாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்வாக பதிய வைக்கவே போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றார். மக்களின் ஆதரவு இல்லையெனில் திட்டத்தை தூக்கி எறிய வேண்டியது அரசின் கடமை என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

வெளி நாடுகளில் மக்கள் வாழாத இடங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் வாழும் பகுதியில் இந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். சுதந்திரம் வாங்கியும் வரிகளை செலுத்தி, மக்கள் வலியுடன் வாழ்ந்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.