தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சரியான நேரத்தில் வெளியே வருவார் என்று அவருடைய மூத்த மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் உடல்நிலை குன்றியுள்ள நிலையில், அவருடைய மூத்த மகன் விஜய பிரபாகரனை கட்சியில் தீவிரமாகக் கொண்டுவர விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். அவருக்கு இளைஞர் அணி தலைவர் பதவியை வழங்க விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 
இந்நிலையில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்லும் விஜய பிரபாகரன், சேலம் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்றார். தேமுதிகவின் சேலம் புறநகர் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய பிரபாகரன் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தேமுதிக நிறுவனர் கேப்டன்  நலமுடன் இருக்கிறார். அவர் சரியான நேரத்தில் கண்டிப்பாக வெளியே வருவார். மக்களைச் சந்திப்பார். தேமுதிக கட்சி நிகழ்ச்சிகளுக்காகப் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வருகிறேன். கட்சித் தொண்டர்கள் எழுச்சியாக உள்ளதைப் பார்க்க முடிகிறது.


தமிழக அரசு முன்பைவிட சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. தமிழகத்தில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவிகளை இன்னும் விரைவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கோவை , நீலகிரி மாவட்டங்களில் எங்கள் கட்சியினருடன் நேரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளேன்” என்று விஜய பிரபாகரன் தெரிவித்தார்.