மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க (இ.ஐ.ஏ 2020) வரைவு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டுள்ளன. இந்த வரைவில் உள்ள திருத்தங்கள் தமிழகத்துக்கு எதிரானவை என்று தமிழக எதிர்க்கட்சிகளும் எதிர்த்துவருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் பாஜக கூட்டணியில் உள்ள  தேமுதிகவும் இந்த வரைவை எதிர்த்துள்ளது. இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, அந்நாட்டின் சிறப்பான சுற்றுச்சூழலுக்கும் இயற்கை வளமே பிரதானம் என்பது நிதர்சனம். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க (இ.ஐ.ஏ 2020) வரைவு அறிக்கை தமிழகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவுக்கு பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு 1986ம் ஆண்டு அமல்படுத்தியது. பின்னர், 2006ம் ஆண்டு இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தற்போது வரை அது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் மேலும் சில திருத்தங்களை செய்து சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம் 2020 என்ற வரைவு அறிக்கையை கடந்த 12ம் தேதி வெளியிட்டது. இதில் செய்யபட்டுள்ள திருத்தங்கள், ஏற்கனவே இச்சட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை நீர்த்துப்போக செய்துவிட்டன.


 மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையில், தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்கள் முன் அனுமதி பெறத் தேவையில்லை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் வெறும் அபராதம் மட்டும் செலுத்தினால் போதும், தொழில் தொடங்கவிருக்கும் நிறுவனம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் புறக்கணிப்பு என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று , பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்” என அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார் விஜயகாந்த். அதில், “இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை (EIA 2020 Draft-ஐ) மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அதோடு நம் கண்களை நாமே குத்திக்கொள்வதற்கு சமம்” என்று ஹாஷ்டேக் இட்டுள்ளார் விஜயகாந்த்.