ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. அந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டணிக்குள் தேமுதிகவைக் கொண்டுவர அதிமுக மற்றும் பாஜக பெரும்பாடு பட்டன. இந்த இழுபறிக்கு முக்கிய காரணம் பாமக தான். தேமுதிகவுக்கும் பாமகவுக்கும் 15 ஆண்டு கால பகை. அதிமுக கூட்டணிக்குள் பாமக வருவதை தேமுதிகவும், தேமுதிக வருவதை பாமகவும் தொடக்கத்தில் இருந்தே விரும்பவில்லை.

தமிழக அரசியலில் எப்படி அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எலியும் பூனையுமான இருந்து வருகிறதோ, அதேபோலத் தான் அதிகாரத்தில் இல்லை என்றாலும் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றன. 

ஆனால், நாடாளுமன்ற தேர்தல் இரு கட்சிகளையும் இணைத்துவிட்டது. பா.ம.க., தே.மு.தி.க. ஆகியவை அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. தற்போது வேறு வழியில்லாமல் இரு கட்சிகளும் தற்போது ஒருவரை ஒருவர் சந்தித்துதான் ஆக வேண்டும்.

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக பெரு முயற்சி எடுத்தபோது, பாமக  ராமதாஸ், விஜயகாந்த்துக்கு வாக்கு வங்கி இல்லை. எனவே அவரை கழற்றி விட்டுவிடுங்கள் என தொடர்நது வலியுறுத்தி வந்தார். இதை கேள்விப்பட்ட பிரேமலதாவும், சுதீஷும் கடும் கோபம் அடைந்தனர். மேலும் சுதீஷ் ஒரு பிரஸ் மீட்டின்போது ஓபனாக பாமகவை பிடிக்கவில்லை என கூறினார் இந்நிலையில் தான் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது 7 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ம.க. போட்டியிடுகிறது. பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. எனவே, தே.மு.தி.க.வின் வாக்குகளை பெற வேண்டும் என்றால், அக்கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் சாந்தப்படுத்துவது அவசியம். அந்த வகையிலேயே, டாக்டர் ராமதாஸ் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.

ஆனால் இது எந்த அளவுக்கு ஒர்க்-அவுட் ஆகும் என்பது போகப்போத்தான் தெரியும் என்கின்றனர் தேமுதிக தொண்டர்கள்.