மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம், நேர்காணல் நடத்திய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், 'சைகை'யில் கேள்வி எழுப்பியதால், அக் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். 

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை, கோயம்பேட்டில் உள்ள, கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது..


புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு அளித்த, 300க்கும் மேற்பட்டோர், நேர்காணலில் பங்கேற்றனர். அவர்களை, ஒரே இடத்தில் மொத்தமாக அமரவைத்து, விஜயகாந்த் நேர்காணல் நடத்தினார்.'

தேர்தலில் நின்றால், எவ்வளவு செலவு செய்வீர்கள்?' என, ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் துாக்கி, சில்லரையை சுண்டுவது போல செய்கை காட்டி, விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, விருப்பமனு அளித்தவர்கள் பதில் அளித்தனர். மற்றபடி, விஜயகாந்த், வாய் திறந்து எதுவும் பேசவில்லை.சிலரை பார்த்து, விஜய காந்த் ஏதோ ஆர்வமுடன் பேச முயற்சித்தார். ஆனால், விஜயகாந்த் பேசியதை அவர்களால் புரிந்துகொள்ள முடிய வில்லை. இதனால், நேர்காணலில் பங்கேற்ற கட்சியினர், அதிர்ச்சி அடைந்தனர்.

உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அமெரிக்காவில், 60 நாட்கள் சிகிச்சை பெற்று, சில நாட்களுக்கு முன், சென்னை திரும்பினார். 'விஜயகாந்த் உடல்நலம் தேறி வருகிறார்; தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார்' என, அவரது மனைவி, பிரேமலதா கூறிவருகிறார். 

ஆனால், நேற்று நடந்த நேர்காணலின் போது, விஜயகாந்தால் பேச முடியவில்லை; சைகை காட்டினார். இதை பார்க்கும்போது, விஜயகாந்த் பூரண உடல் நலம் தேறியதாக தெரியவில்லை. எனவே, தேர்தல் பிரசாரத்தில், அவர் ஈடுபட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் அதிமுகவுடன் கூட்டணி பேரம் பேசத்தான் முழுவதும் குணமடையாத விஜயகாந்த்தை அவசர அவசரமான அமெரிக்காவில் இருந்து அவரது குடும்பித்தின் அழைத்துவந்து விட்டதாகவும் தேமுதிக தொண்டர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.