Vijayakanth appear at Tharapuram meeting

விஜயகாந்தின் போக்கு அவர் கட்சியின் கீழ்நிலை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிராகவும், பகீரென்றும் இருக்கிறது. ஆனால் அவரை நெருங்கி நிற்கும் தலைமை கழக நிர்வாகிகள் சில நேரம் உருகி கண்ணீர் விடுமளவுக்கும் நடந்து கொள்கிறாராம். 

மே 1_ம் தேதியன்று தே.மு.தி.க. சார்பாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உழைப்பாளர் தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் விஜயகாந்த் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மழையின் நடுவில் தொண்டர்கள் கூடி மணிக்கணக்காக காத்திருந்த நிலையில் இரவு 10 மணிக்கு முடியப்போகும் கூட்டத்திற்கு 9:15_க்குதான் வந்தார் விஜயகாந்த். 

சற்றே கைத்தாங்கலாக மேடையில் வந்தமர்ந்தவர் சட்டென்று கண் கலங்கினார், பின் துடைத்துக் கொண்டார். மேடையில் தெளிவற்று பேசும்பொதும் கண் கலங்கினார்.

பிறகு தன்னை பார்த்து உற்சாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த தொண்டர்கள் மேல் கோபம் கொண்டு பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே பேச்சை நிறுத்திவிட்டார். பின் தொழிலாளர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கிவிட்டு கிளம்பிவிட்டார். மொத்தமாக அரைமணி நேரமே மேடையில் விஜயகாந்த் இருந்ததில் தொண்டர்கள் கடும் அப்செட்.

இந்நிலையில் காரில் திரும்பும் போதும், அறைக்கு சென்ற பின்னும் ‘கூட கொஞ்ச நேரம் தொண்டர்கள் கூட நான் இருந்திருக்கணும்டா! அவங்க குரல் கொடுக்குறதை பார்த்து கோபப்பட்டுட்டேன், தப்பு, தப்பு. நீங்களாச்சும் எனக்கு சொல்லி தடுத்திருக்கலாமே. 

எனக்கு மேடையிலே திடீர்னு கண் கலங்கிடுச்சு. அழுதுட்டேன், நான் ஏன்டா அழுதேன்?’ என்று தன்னை சுற்றி நிற்கும் கழக தலைமை நிர்வாகிகளிடம் பாவமாய் கேட்டிருக்கிறார். 

பதில் சொல்ல முடியாமல் அவர்கள் கண் கலங்கிவிட்டார்கள். அவர்களுக்கு மட்டும் காரணம் தெரியுமா என்ன?