vijayabaskar is a part time minister says stalin

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கிவிட்டு, அத்துறைக்கு முழுநேர அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகம் உள்ளது என்று, தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் யாரும் பீதியடைய வேண்டியதில்லை என்றும் சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

டெங்கு நோயின் தாக்கம், 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று திமுக எச்சரிக்கை மணி அடித்தாலும், அமைச்சர் விஜயபாஸ்கர் காதில் விழவில்லை என்றும், அந்த அமைச்சரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் விநியோகத்திற்கான பட்டியலை வருமானத்துறை கைப்பற்றிய அன்றே அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். பான், குட்கா விற்பனை செய்ய அனுமதிக்க 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரின் போதாவது, அமைச்சரை ராஜினாமா செய்ய முதலமைச்சர் கூறியிருக்க வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கரால், சுகாதாரத்துறையை முழுநேர பணியாக கவனிக்க முடியவில்லை. அவர் ஒரு பார்ட் டைம் மினிஸ்டர் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

அமைச்சர் விஜயபாஸ்கரால், சுகாதாரத்துறை ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டது. எனவே, சுகாதார துறைக்கு முழுநேர அமைச்சர் ஒருவரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நியமிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.