நீட் தேர்வு விவகாரத்தில், தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய உள்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, சுகாதார துறை அமைச்சகங்கள்தான் அனுமதி தர வேண்டும். ஆனால், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேவையில்லாமல், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தினமும் சந்தித்து வருகிறார்.

இது நீட் விலக்குக்காக நடத்தப்படும் சந்திப்பாக தெரியவில்லை. மாறாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இருந்து தப்பிப்பதற்கு உதவி கோருவதற்காக நடத்தப்பட்ட சந்திப்பாகவே தோன்றுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்கு பெறுவதில் அனைத்து வழிகளிலும் பினாமி எடப்பாடி அரசு கிட்டத்தட்ட தோல்வியடைந்து விட்டது என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறுவதற்கான வாய்ப்புகள் முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டன.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறுவதற்கான சட்டத்துக்கு, எப்படியும் மத்திய அரசின் அனுமதியைப் பெற்று விடுவோம் என்று கடந்த ஆறு மாதங்களாக கூறி வந்த தமிழக அரசு, இப்போது அந்த வாய்ப்பை முற்றிலுமாக இழந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டிருந்தும், சாதகமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் ராமரதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் நீட் விவகாரத்தில் தமிழகத்தின் சார்பில் உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதே ஐயமாக உள்ளது என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய உள்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை அமைச்சகங்கள்தான் அனுமதி தர வேண்டும். அதனால் அத்துறை அமைச்சர்களை விஜயபாஸ்கர் சந்தித்திருக்க வேண்டும்.

ஆனால், அவரோ தேவையில்லாமல் முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சரும், இப்போதைய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனை தினமும் சந்தித்து பேசி வருகிறார்.

இது நீட் விலக்குக்காக நடத்தப்படும் சந்திப்பாக தெரியவில்லை. மாறாக, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இருந்து தப்பிப்பதற்கு உதவி கோருவதற்காக நடத்தப்பட்ட சந்திப்பாகவே தோன்றுகிறது.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.