ஊழல் செய்து நாங்கள் கடனாளி ஆகவில்லை. சொத்துகளை அடமானம் வைத்துதான் கடன் பெற்றோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.  

தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் தான் விஜயகாந்த். இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மவுண்ட்ரோடு கிளையில் அவர் கடன் வாங்கினார். மதுராந்தகம் தாலுக்காவில் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி நிலத்தை வங்கியில் அடகு வைத்து அவர் கடன் பெற்றார். வாங்கிய கடனை திரும்பி செலுத்தாததால் விஜயகாந்த்தின் கல்லூரி மற்றும் வீடுகள் ஏலம் விடப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழில் செய்தி வெளியானது. இது தே.மு.தி.க. வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் மருங்காபுரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஊழல் செய்து கடனாளி ஆகவில்லை. சொத்துகளை வங்கியில் அடமானம் வைத்துதான் கடன் பெற்றோர் என்றார். கடனை அடைக்க கால அவகாசம் தரப்படவில்லை. கடன் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும்.

தண்ணீர் பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தண்ணீரை அதிமுக உற்பத்தி செய்யவில்லை. மழை வந்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.