கூட்டணி யாருடன் அமைந்தாலும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதிமுக கூட்டணியை உறுதி செய்யாமல் இழுத்தடித்து வரும் தேமுதிக அவ்வப்போது தோழமை கட்சிக்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்த பிறகு திமுகவுடன் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தற்போது தேனி தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை களமிறக்க முடிவு செய்துள்ளது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தமிழகம் முழுவதும் தேமுதிக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். மக்களவை தேர்தலில் எந்த கூட்டணியில் இணைவது என்பது குறித்து கடந்த இரண்டு நாட்களாக விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மதுரை உசிலம்பட்டியில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ''மக்களவை தேர்தலில் தேமுதிக எப்படி கூட்டணி அமைத்தாலும் தேனி தொகுதியில் விஜய பிரபாகரன் தேமுதிக வேட்பாளராக போட்டியிட வேண்டும். அனைவரும் விஜய பிரபாகரன் வெற்றிக்கு துணை நிற்க வேண்டும்'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தேனிய் தொகுதியில் களமிறங்க ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக சார்பாக விருப்பமனு செய்துள்ளார். இந்நிலையில் விஜயகாந்த் மகனும் அந்தத் தொகுதியில் களமிறக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.