நடிகர் விஜய் அடிக்கடி நன்றி மறப்பவர் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று விஜயின் மெர்சல் படத்திற்கு தேதி குறிக்கப்பட்டது. இதனை நம்பி படத்தின் தாயரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸ் நல்ல விலைக்கு அனைத்து ஏரியாக்களையும் விற்றுத் தீர்த்தது. ஆனால் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
மெர்சல் படத்தில் விலங்குகள், பறவைகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை படப்பிடிப்பிற்கு பயன்படுத்திய போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை படக்குழு பின்பற்றவில்லை. இதனை காரணம் காட்டி மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்று வழங்க மத்திய விலங்குகள் நல வாரியம் மறுத்தது. விலங்குகள் நல வாரியம் சான்றிதழ் வழங்காமல் தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது என்று திரைப்பட தணிக்கை துறை கைவிரித்துவிட்டது.
நடிகர் விஜய் தொடங்கி இயக்குனர் அட்லி வரை பலரும் முயன்றும் தணிக்கை துறையின் சான்றிதழ் எட்டாக்கனியாகவே இருந்தது. மத்திய விலங்குகள் நல வாரியமும் கூட விலங்குகள், பறவைகளை படப்பிடிப்பிற்கு பயன்படுத்திய போது உரிய விதிகள் பின்பற்றப்பட்டதற்கு ஆதாரம் தந்தால் மட்டுமே தடையில்லா சான்று என்று பிடிவாதம் பிடித்தது.
இதனால் மெர்சல் தீபாவளிக்கு வெளியாகுமா? என்கிற சந்தேகம் எழுந்தது. தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்சிடம் இருந்து விநியோக உரிமையை பெற்ற விநியோகஸ்தர்கள் பதற்றத்தில் தங்கள் பணத்தை திரும்ப கேட்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உதவி கேட்பது என்று விஜய் முடிவெடுத்தார்.
நடிகர் விஜயின் பி.ஆர்.ஓவாக இருந்து பின்னர் இயக்குனர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள பி.டி.செல்வகுமாருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் பழக்கம் உண்டு. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் கடம்பூர் ராஜூவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடியுடன் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் மெர்சல் படத்தின் பிரச்சனையை கூறி உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய்.
இதனை தொடர்ந்தே கடம்பூர் ராஜூ மூலமாக விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடந்த ஆண்டு சந்தித்து மெர்சல் விவகாரத்தில் உதவி கோரியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஒரு நடிகரின் படத்திற்கு பிரச்சனை என்றதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உதவியாளர்கள் மூலமாக செய்ய வேண்டியதை செய்து மெர்சலுக்கு விலங்குகள் நல வாரியத்தில் இருந்து தடையில்லா சான்று பெற்றுக் கொடுத்தார்.

இதன் பிறகே மெர்சல் திரைப்படம் தணிக்கைக்கு சென்று வெளியானது. இந்த தகவல்கள்அனைத்தையுமே இன்று (09-11-2018) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ இலை மறை காய் மறையாக வெளிப்படுத்தினார். அத்துடன் சர்கார் படத்தில் ஜெயலலிதாவையும், அரசின் நலத்திட்டங்களையும் இழிவு செய்யும் வகையில் காட்சி இருந்ததை தெரிந்து நடிகர் விஜயை தொடர்பு கொண்டதாகவும் கடம்பூர் ராஜூ கூறினார்.
சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீங்களே நீக்கிவிட்டால் நல்லது என்று விஜயிடம் எடுத்துரைத்தும் எதுவும் நடக்கவில்லை என்று கடம்பூர் ராஜூ வேதனையுடன் குறிப்பிட்டார். இதன் பிறகே அ.தி.மு.கவினர் போராட்டத்தில் இறங்கியதும் சர்கார் படக்குழு இறங்கி வந்து காட்சிகளை நீக்கியதும் நமக்கு தெரிந்ததே. கடந்த ஆண்டு மெர்சல் படம் வெளியாக கடம்பூர் ராஜூ உதவிய நிலையில் அவர் இந்த ஆண்டு சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு விஜயை தொடர்பு கொண்டு கேட்டள்ளார்.

ஆனால் விஜயோ கடந்த ஆண்டு கடம்பூர் ராஜூ செய்த உதவியை மறந்து சர்கார் பட விவகாரத்தில் கைவிரித்துள்ளார். இது கிட்டத்தட்ட நன்றி மறந்த செயலுக்கு ஒரு உதாரணம் என்று கடம்பூர் ராஜு உடன் இருப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதே போன்று நடிகர் விஜய் திரையுலகில் தடுமாறிக் கொண்டிருந்த போது அவருடன் செந்தூரப்பாண்டி படத்தில் இணைந்து நடித்து பேருதவி செய்தவர் விஜயகாந்த்.

இந்த ஆண்டு துவக்கத்தில் விஜயகாந்த்தின் திரையுலக வாழ்வை பாராட்டும் வகையில் தே.மு.தி.க சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு விஜய்க்கு அழைப்பு விடுத்தும் அவர் செல்லவில்லை. ஒரே ஒரு வீடியோவை மட்டும் வாழ்த்து தெரிவித்து விஜய் ஒதுங்கிக் கொண்டார். அப்போதும் கூட விஜய் நன்றி மறந்தவர் என்கிற பேச்சு எழுந்தது.
