சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக செயல்படவே எஸ்ஏசி புதிய கட்சி ஆரம்பித்துள்ளதாகவும் அதில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் தான் அதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் திமுக – அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆனால் இதர கட்சிகளான பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் நிலைப்பாடும் தமிழக அரசியல் களத்தை மாற்றும் தன்மை கொண்டவை. உதாரணமாக கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் அமைந்த மக்கள் நலக்கூட்டணி ஜெயலலிதா அரசுக்கு எதிரான வாக்குகளை பிரித்து திமுக பல்வேறு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்க காரணமாகிவிட்டது. இதனால் தான் கடந்த தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அமைத்தார்.

எனவே தான் என்ன தான் பலமாக இருந்தாலும் இந்த முறை தேர்தல் வியூகத்தில் கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதற்காக திமுக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதில் மிக முக்கியமான வியூகம் பலமான 3வது அணி அமையாமல் தடுப்பது தான். இதற்காகவே மதிமுக, விசிக போன்ற கட்சிகளை தொடர்ந்து திமுக கூட்டணியில் தக்க வைத்துள்ளது .மேலும் பாமகவை திமுக கூட்டணியில் சேர்க்கவும் திமுக முயற்சித்து வருகிறது. அதே சமயம் ரஜினி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படும் அரசியல் கட்சி திமுகவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் சூழல் தற்போது இல்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ரஜினி கட்சி ஆரம்பித்தால் எதிர்கொள்ள என்ன செய்வது என்பது தான் திமுகவின் மிக முக்கியமான ஆலோசனையாக இருந்தது. அதன் அடிப்படையில் ரஜினியை எதிர்கொள்ள விஜயை பயன்படுத்திக் கொள்வது. ரஜினி ரசிகர்களை சமாளிக்க விஜய் ரசிகர்களை களம் இறக்குவது என்பது தான் திமுகவின் திட்டம். இதற்காக எஸ்ஏசியுடன் திமுகவின் மிக முக்கிய புள்ளி பல முறை திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் திமுக கூட்டணியில் விஜய் ரசிகர்களுக்கு கணிசமான தொகுதிகளை எஸ்ஏசி கேட்டதாக கூறுகிறார்கள்.

உதய சூரியன் சின்னத்தில் விஜய் ரசிகர்களுக்கு சீட் ஒதுக்க கூட திமுக முன்வந்தது. ஆனால் தேர்தலில் விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது தான் திமுகவின் ஒரே நிபந்தனையாக இருந்தது. இதில் மட்டுமே உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்த நிலையில் திமுகவின் முக்கிய புள்ளி – விஜயின் தந்தை எஸ்ஏசி இடையிலான பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்தது. இது குறித்து விஜயுடன் எஸ்ஏசி பலமுறை பேசியதாகவும் ஆனால் விஜய் பிரச்சாரத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று  சொல்கிறார்கள்.

மேலும் எஸ்ஏசி விஜய் ரசிகர்கள் மூலம் வெளிப்படையாக திமுகவிற்கு தேர்தல் பணியாற்றுவதாக முன்வைத்த யோசனையையும் திமுக நிராகரித்துவிட்டதாக கூறுகிறார்கள். இதனால் தான் திமுகவை படிய வைக்க திடீரென அரசியல் கட்சி ஒன்றை எஸ்ஏசி ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். அதுவும் விஜய்பெயரிலேயே அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதால் திமுக கண்டிப்பாக இறங்கி வந்து தான் ஆக வேண்டும் என்பது எஸ்ஏசியின் நம்பிக்கை. விஜய் பெயரிலான கட்சியுடன் கூட்டணி என்றால் திமுக ஒப்புக் கொள்ளும் என்றும் எஸ்ஏசி கணக்கு போட்டுள்ளார்.

மேலும் விஜயின் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளராகவும் எஸ்ஏசி இருக்கிறார். எனவே தமிழகம் முழுவதும் மக்கள் இயக்க நிர்வாகிகளை திமுகவிற்காக தேர்தல் பணியாற்றச் செய்ய அது தனக்கு உதவும் என்றும் அவர் கணக்கு போட்டுள்ளார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் எஸ்ஏசியின் கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் அறிவித்துள்ளதோடு தனது ரசிகர்கள் யாரும் தனது தந்தையின் கட்சியில் சேரக்கூடாது என உத்தரவும் போட்டுள்ளது எஸ்ஏசிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிற்காக தேர்தல் பணியாற்ற முயற்சி செய்ய அது தனது மகனின் வெறுப்பை சம்பாதிக்கும் அளவிற்கு சென்றது எஸ்ஏசியின் இமேஜையும் டேமேஜ் ஆக்கியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் திமுக சகவாசம் தான் என்று கூறி புலம்புகிறார்கள் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள்.