தமிழகத்தில் காபந்து முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி.

பொதுச்செயலாளராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்படும் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான விஜய சாந்தி தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயசாந்தி நிருபர்களிடம் கூறியதாவது-

ஆந்திராவில் இதே நிலை

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் ஆந்திராவில் கடந்த 1984ம் ஆண்டு நிகழ்ந்த அரசியல் சூழலை எனக்கு நினைவூட்டுகிறது.

அப்போது, என்.டி.ராமா ராவ்தலைமையிலான ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசை, நந்தலாபாஸ்கர் ராவ் கவிழ்க்க முயற்சித்தார்.

அப்போது, டெல்லி சென்று குடியரசு தலைவரைச் சந்தித்து, தனது பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார் என்.டி.ராமாராவ்.

அப்போது என்.டி.ராமாராவுக்கு பக்கபலமாக இப்போதுள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இருந்தார்.

வெங்கையாவுக்கு வேண்டுகோள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் இருந்ததில் இருந்து தமிழக அரசியலில் மிகவும் ஈடுபாட்டுடன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செயல்பட்டு வருகிறார்.

ஆதலால் அவருக்கு இருக்கும் நற்பெயரையும், பதவியையும் பயன்படுத்தி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தமிழகத்தில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கும் சசிகலாவைமுதல்வராக்க அனுமதி வழங்க வேண்டும்.

எந்த விதமான குதிரை பேரமும் நடந்து விடாமல் தடுக்க வேண்டும்.

அவ்வாறு நடந்தால், அது ஜனநாயகரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அச்சுறுத்தலாக அமைந்து, அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்திவிடும்.

சந்தர்ப்பவாதி

தமிழக அரசியலில் பிரச்சினை செய்துவரும் ஓ.பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி.

சட்டப்பேரவைத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டபின், முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார்.

அடுத்த அரசு அமையும் வரை காபந்து முதல்வராக இருங்கள் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அவர் இன்னும் தானே முழுமையாக முதல்வர் என்ற நினைப்பில் செயல்பட்டு வருகிறார்.

முட்டாள்தனமானது

சசிகலா பொதுச்செயலாளராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படும் போது அமைதியாக இருந்து, வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.

ஆனால், இப்போது தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று மக்கள் மத்தியில் அனுதாப அலையை தேடுகிறார்.

தானே அரசியலமைப்பு சட்டத்தின் படி தேர்வு செய்யப்பட்டவர் என்று தொடர்ந்து கூறுவது முட்டாள்தனமானது.

குழப்பம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கூறி குழப்பத்தை பன்னீர் செல்வம் உண்டாக்கி இருக்கிறார்.

ஜெயலலிதாவை பார்க்க மருத்துவமனையில் தன்னை அனுமதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது முன்பு கூறிய இவரின் வார்த்தைகளுக்கு முரணாக இருக்கிறது. இப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதை இழந்தாவது, முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டும்.

அதற்காகத்தான் இப்படி முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார்.

சதி

ஜெயலலிதா தனது ஆட்சி முழுவதும் தி.மு.க. கட்சியை கடுமையாக எதிர்த்தார்.

ஆனால், ஓ.பன்னீர் செல்வமோ எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்டு சதி செய்கிறார்.

ஜெயலலிதாவின் ஆன்மா கூறியபடி செயல்படுகிறேன் என்று கூறி விட்டு, தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட எப்படி பன்னீர் செல்வத்தால் முடிகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.