உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் தொடங்கிய பிரச்சாரமே எடுபடாத நிலையில் கனிமொழி சேலத்தில் தொடங்கிய பிரச்சாரத்தையும் கண்டு கொள்ள ஆள் இல்லாமல் பிசுபிசுத்துப்போனதால் ஐ பேக் டீமின் தேர்தல் வியூகம் மீதே சந்தேகம் எழுந்துள்ளது.

திமுகவின் சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீமுடன் கடந்த ஆண்டு திமுக ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் பிறகு ஸ்டாலின் உள்ளிட்டோரின் பிரச்சார திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு ஐ பேக் டீமிடம் சென்றது. கொரோனா காரணமாக இப்பணிகளில் பின்னடைவு ஏற்பட்ட நிலையிலும் கூட ஒன்றினைவோம் வா என்று கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக நிர்வாகிகள் மூலமாக செய்த உதவி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் இந்த ஒன்றினைவோம் வா மக்களிடம் மு.க.ஸ்டாலினை கொண்டு சேர்ப்பதற்கு பதில் லோக்கல் திமுக நிர்வாகிகளை கொண்டு சேர்த்தது. உதவிகள் செய்ததன் மூலம் அனைத்து பகுதிகளிலும் திமுகவினருக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் ஸ்டாலின் பெரிய அளவில் இதனால் பேசப்படவில்லை. இப்படி முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கு ஏற் ஐ பேக் அடுத்தடுத்து திமுகவிற்காக போட்டுக் கொடுத்த திட்டங்கள் அனைத்தும் கேலிக்கு உரியதாகிவிட்டது.

திமுகவில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாமை ஐ பேக் கொடுத்த யோசனை மூலம் தான் அக்கட்சி முன்னெடுத்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வரை திமுகவில் இணைந்ததாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பின்னி பெடல் எடுத்தன. மேலும் ஏற்கனவே திமுகவில் இருப்பவர்களே மீண்டும் ஆன்லைன் மூலம் உறுப்பினர்களான காமெடியும் நடைபெற்றது. இதன் மூலம் லட்சக்கணக்கில் திமுகவில் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக ஸ்டாலின் அறிக்கை விடுத்தாலும் அது உண்மை இல்லை என்பது அவருக்கே தெரியும்.

இந்த நிலையில் தான் ஐ பேக் டீம் அடுத்ததாக விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்கிற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது திமுக. இதுவும் வழக்கம் போல் ஐ பேக் டீமின் யோசனை தான். மு.க.ஸ்டாலின் தவிர திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள், நடிகர், நடிகைகளை தற்போதேபிரச்சாரத்திற்கு அனுப்புவதுதான் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் எனும் திட்டமாகும். இந்த திட்டத்தின் அடிப்படையில் தான் உதயநிதி முதன் முதலில் திருவாரூரில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

தற்போதும் கூட ஆங்காங்கே உதயநிதி மக்களை சந்தித்து வருகிறார். ஆனால் எங்கும் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு இல்லை. இதே போல் கனிமொழி சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் கட்சி நிர்வாகிகள் வட அந்த பிரச்சாரத்திற்கு வரவில்லை என்கிறார்கள். மகளிர் அணி நிர்வாகிகள் மட்டுமே கனிமொழி பிரச்சாரத்திற்கு வந்த நிலையில் பெரிய அளவில் பெண்கள் கூட்டமும் இல்லை. இதே போல் திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட பேச்சாளர்களும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்.

ஆனால் அவர்கள் செல்லும் இடம் எல்லாம் கட்சிக்காரர்கள் மட்டுமே வருகிறார்கள். மக்களை பிரச்சாரத்திற்கு வருமாறு அழைத்தாலும், தேர்தல் எப்போது என்று கேட்க, அது இனிதான் அறிவிப்பார்கள் என்று திமுகவினர் பதில் சொல்ல, தேர்தலே அறிவிக்காமல் எப்படி பிரச்சாரம் என்று அவர்கள் திமுக நிர்வாகிகளை டென்சன் ஆக்குகிறார்களாம் மக்கள். இதே போல் பிரச்சாரம் என்றால் வேட்பாளர் யார்? என்கிற கேள்விக்கும் பதில் இல்லாததால் மக்களை திரட்ட திமுகவினர் படாதபாடு படுகிறார்களாம். இதற்கிடையே ஜனவரி மாதம் பிரச்சாரத்தை துவக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அப்போதும் இதே நிலைமை நீடித்தால் ஐ பேக்கின் ஐடியா அதோ கதிதான் என்பதில் சந்தேகம் இல்லை.