vetrivel blame admk gave money to rk nagar voters

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 2 லட்சம். ஓட்டுக்கு 6000 ரூபாய் வீதம் 125 கோடி ரூபாயை அதிமுக பட்டுவாடா செய்துவருகிறது என தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதை ஒட்டி பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தீவிரமடைந்துள்ளது பிரசாரம் மட்டுமல்ல. பணப்பட்டுவாடாவும்தான். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா படு ஜோராக நடைபெறுகிறது. ஆங்காங்கே சிலர் லட்சக்கணக்கிலான பணத்துடன் சிக்குவதைக் கண்டும் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி பணப்பட்டுவாடா செய்யப்படுவதை கண்டும் தேர்தல் ஆணையமே மிரண்டு நிற்கிறது.

இந்நிலையில், பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாகவும் பணப்பட்டுவாடாவைத் தடுப்பது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவுடனான சந்திப்புக்குப் பீறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், அதிமுகவினர் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஆர்.கே.நகரில் 2 லட்சம் ஓட்டுகள் உள்ளன. ஓட்டுக்கு 6000 ரூபாய் என 125 கோடி ரூபாயை ஆட்சியாளர்கள் பட்டுவாடா செய்துவருகின்றனர். தினகரனை தோற்கடிப்பதற்காகவே ஆட்சியாளர்கள் ஓட்டுக்கு 6000 ரூபாய் கொடுத்து வருகின்றனர் என வெற்றிவேல் குற்றம்சாட்டினார்.

தினகரன் ஆதரவாளரான செல்வியிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல் பொய்யானது. பூத் வேலைகளை கவனித்துவரும் செல்வி, கையில் 10000 ரூபாய் கூட வைத்திருக்கக்கூடாதா? என வெற்றிவேல் கேள்வி எழுப்பினார்.