ஆனந்த கிருஷ்ணன் இதுதான் இன்றைய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் தந்தையான குமரி அனந்தனின் உண்மையான பெயராகும். 

முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தற்போதைய குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை அடுத்த குமாரி மங்கலத்தைச் சேர்ந்தவர் தான் இந்த குமரி ஆனந்தன்.

1933ல் பிறந்த குமரி ஆனந்தன் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். குமரி ஆனந்தனின் மனைவி பெயர்  கிருஷ்ண குமாரி, இவரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் கிடையாது. வடக்கன் குலத்தைச் சேர்ந்த சங்கு கணேசன் நாடார் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. கருணாநிதியின் புத்தகங்களை அச்சடித்து வெளியிட்டவர் ஆவார். 

இந்த சங்கு கணேசன் எம்ஜிஆர் உடனும் நன்கு தொடர்பில் இருந்தவர். எனவே குமரி அனந்தனின்  வீடும் அவரது மனைவியின் வீடும் செல்வாக்கான குடும்பங்கள் ஆகும். அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் குமரி ஆனந்தன் எந்த சூழ்நிலையிலும் தனது பகட்டையும் பந்தாவும் எங்குமே காட்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால் தேசிய கட்சியின் கூட்டணியோடு குமரிஅனந்தன் ஆறு எம்எல்ஏக்களை தனது சொந்த கட்சியிலேயே வைத்திருந்தார் என்பது தான் ஹைலைட்டான விஷயம் ஆகும். இருந்தாலும்கூட தனது அரசியல் பலத்தை வைத்துக் கொண்டு எந்த ஒரு சிறு விமர்சனத்துக்கு கூட இடம் கொடுக்காமல் ஊழலுக்கு இடம் கொடுக்காமல் தனது பெயர் கெட்டுப் போகாமல் இதுவரை பார்த்து வருகிறார் என்பதுதான் இந்த முதுபெரும் அரசியல் வாதியின் சிறப்பு அம்சமாகும்.

இதை சொல்வதற்கு காரணம் உள்ளது. மாபெரும் தலைவரான அறிஞர் அண்ணாவிற்கு பிறகு தமிழகத்தில் தற்போது நடந்துவரும் கூத்துகள் அனைவரும் அறிந்ததே ஆகும். பதவி என்று ஒன்று கிடைத்து விட்டால் போதும் சிறிது நாட்கள் தான் அமைதி அதற்குப்பிறகு அவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே கிடையாது என்பது நம் தமிழக மக்கள் நன்கு அறிந்த உண்மையாகும். செல்வி ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை அடக்கி ஆண்டாரே தவிர.. ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் சசிகலா என்னும் தனது தோழியின் உருவத்தில் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் அவரை சார்ந்த ஆட்கள் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. 

தமிழகம் என்றும் அதை மறந்து விடாது. அதேபோன்றுதான் கருணாநிதி முதல்வராக இருக்கும் போதெல்லாம் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் அவரைச் சேர்ந்தவர்களும் அவரது உறவினர்களும் போட்ட ஆட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒட்டுமொத்த தமிழகமும் ஆழ்ந்து யோசித்தால் ஒவ்வொரு சம்பவமும் நம் கண் முன்னால் வந்து செல்வது நிச்சயமாகும். கேபிள் டிவி மாபியா, மணல் கடத்தல் அளவுக்கு அதிகமான கமிஷன், அதிகார வெறி, அதற்காக அப்பாவிகளை பழிவாங்குதல் என சசிகலா குடும்பத்தினரும் கருணாநிதி குடும்பத்தினரும் செய்த அட்டூழியங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

கருணாநிதிக்கு இணையான அல்லது அவருக்கு மூத்த அரசியல் தலைவரான குமரி ஆனந்தன் இங்குதான் இந்த விஷயங்களில்  முற்றிலுமாக மாறுபடுகிறார். குமரி ஆனந்தன் நினைத்திருந்தால் மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது அவருடைய விசுவாசியான இவர் அவருடனேயே சென்றிருக்கலாம். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் மூப்பனார் என்று பேட்டியில் கூறிவிட்டு, ஆனால் கொள்கை பிடிப்புதான் தனக்கு முக்கியம் என தனது சொந்த கட்சியிலேயே நீடித்து வந்தார். அந்த அளவிற்கு கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் சரி, கையில் ஆறு சொந்த எம்எல்ஏக்களை வைத்து இருந்த போதும் சரி, எந்த ஒரு அதிகார துஷ்பிரயோகமும் செய்யவில்லை என்பதை மீண்டும் மீண்டும் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.. தன் தந்தையின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக பிஜேபியில் இணைந்த அவரது மகள் தமிழிசையும் ஒரு படி மேலே போய் குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு பேச்சு வார்த்தை இல்லாமல் ஒருகட்டத்தில் தனது மகனே தனக்கு எதிராக கோஷம் போடும் அளவிற்கு குடும்பத்தில் பிரச்சனை என அனைத்து சங்கடங்களையும் சமாளித்து இன்று மிக உயர்ந்த பதவியான தெலுங்கானா ஆளுநர் என்ற பதவியை அடைந்து இருக்கிறார்.

இது குமரி அனந்தனின் ஒட்டுமொத்த தூய்மையான செயல்பாடுகளுக்கு கிடைத்த பரிசு என்கிறார்கள் அவரது குடும்ப நண்பர்கள். அதாவது சசிகலா குடும்பமும் கருணாநிதி குடும்பமும்  சாதிக்காததை நேர்மையான முறையில் கடுமையான உழைப்பின் மூலம் சாதித்திருக்கிறது குமரிஅனந்தன் குடும்பம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.