பாலியல் தொடர்பான வழக்கு  விசாரணைகளில் 50க்கும் அதிகமான  வாய்தாவுக்கு வராமல் நித்யானந்தாவுக்கு விலக்கு அளித்தது எப்படி என நீதிபதி குன்கா சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார் .  அதேபோல் நித்தியானந்தாவை நேரில் சந்தித்து வந்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி குன்ஹா உத்தரவிட்டுள்ளார் .  சர்ச்சை சாமியார் என பெயரெடுத்த நித்யானந்தா  மீது கடந்த 2010ஆம் ஆண்டு பாலியல்  வழக்கு தொடரப்பட்டது . ராம்நகர்   நீதிமன்றத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் ,  கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு  விசாரணை மாற்றப்பட்டது . 

இந்நிலையில்  நித்யானந்தாவுக்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் இன்று கர்நாடக நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது  இதுவரை ராம்நகர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் 50 வாய்தாவுக்கு மேல் நித்யானந்தா நேரில் ஆஜராகவில்லை ,  எனவே அவரது ஜாமீன் மனு ரத்து செய்ய வேண்டுமென லெனின் கருப்பன் மேலும் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அது நீதிபதி நரேந்திர முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.   இந்நிலையில் நித்யானந்தாவின் ஜாமினை ரத்து செய்யக்கோரி மற்றொரு வழக்கு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா முன்பு  விசாரணைக்கு வந்தது .  அப்போது நித்யானந்தா எங்கே இருக்கிறார் என கர்நாடக போலீஸாரிடம் குன்கா கேள்வி எழுப்பினார் .   நித்தியானந்தா இந்தியாவிலேயே இல்லை என  விசாரணை அதிகாரி பதிலளித்தார் . 

அப்போது குறுக்கிட்ட குன்ஹா நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் சர்வதேச போலீசாரால் வழங்கப்பட்டுள்ள போதிலும் 50 வாய்தாவுக்கும் வராமல் நித்யானந்தாவுக்கு விலக்கு அளித்தது எப்படி என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார் .  அதேபோல் அவரது பாஸ்போர்ட் காலாவதியாகி வெளிநாட்டில் உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைதானா என விசாரணை அதிகாரியிடம் நீதிபதி கேட்டார் . அத்துடன்  உடனடியாக விசாரணை அதிகாரி நேரடியாக நித்தியானந்தாவை சந்தித்து அவரின் ஜாமீன் ரத்து செய்வது தொடர்பாக சம்மனை  நேரில் அளித்துவிட்டு அதற்கு  பதில் அறிக்கையை வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார் .