இடைத்தேர்தலில் கடைசி நேரத்தில் அதிமுகவினர் காட்டிய தீவிரம் திமுக தரப்பை ஒரு கனம் ஆடிப்போகச் செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

ஜெயலலிதா இருக்கும் போது ராத்திரி பகல் பாராமலும் தூக்கம் இல்லாமலும் தேர்தல் பணி செய்பவர்கள் அதிமுக அமைச்சர்கள். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு யாரும் எதையும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. ஆர்.கே.நகரில் சுயேட்சையிடம் தோல்வி அடைந்தது. நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததது. இதற்கெல்லாம் அதிமுக அமைச்சர்கள் தேர்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதது தான் காரணமாக கூறப்பட்டது.

அதே சமயம் எஸ்.பி.வேலுமணி போன்ற அமைச்சர்களின் தீவிர செயல்பாடு காரணமாக நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கணிசமான இடங்களை அதிமுக வெல்ல முடிந்தது. இதனால் தான் அதிமுக ஆட்சியும் காப்பாற்றப்பட்டது. ஆனாலும் கூட அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதா இருந்தது போல் தற்போது தேர்தல் பணிகளில் தாராளம் காட்டுவதில்லை என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவி பறிப்பிற்கு பிறகு அதிமுகவில் எல்லாம் மாறிவிட்டது என்பதை இந்த இடைத்தேர்தல் பணிகள் காட்டியுள்ளது. அதிலும் தேர்தலுக்கு முதல் நாள் வழக்கம் போல் அதிமுகவினர் காட்டிய திடீர் வேகம் திமுக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜெயலலிதா இருக்கும் போது நடைபெறும் பணிகள் அச்சுபிசகாமல் அப்படியே நடந்துள்ளது. இந்த தகவல் உடனடியாக ஸ்டாலினுக்கு பாஸ் செய்யப்பட்டுள்ளது.

நாங்குநேரியை பற்றி கவலை இல்லை. ஆனால், திமுக வசம் இருந்த விக்கிரவாண்டி அதிமுகவிடம் சென்றுவிடக்கூடாது என்று டென்சன் ஆகியுள்ளார் ஸ்டாலின். உடனடியாக பொன்முடியை தொலைபேசியில் அழைத்து விக்கிரவாண்டி பத்திரம் என்று கூறியதோடு சில தகவல்களையும் கூறியுள்ளார். ஒன்னும் பிரச்சனை இல்லை தலைவரே, விக்கிரவாண்டி நமக்கு தான் என்று பொன்முடி உறுதியாக கூறியுள்ளார்.

ஸ்டாலினிடம் இருந்து லேட் நைட் வந்த போன் காலால் திமுகவினரும் விடிய விடிய தேர்தல் பணிகளை பார்த்துள்ளனர். அதன் எதிரொலியாக விக்கிரவாண்டியில் அதிகாலை முதலே திமுகவினர் தேர்தலுக்கான பிரத்யேக பணிகளை துவங்கிவிட்டனர்.