மோடிக்கு மிக நெருக்கம்..! தமிழகத்தின் புதிய ஆளுநர்..! யார் இந்த ஆர்.என்.ரவி?
நாகா போராளிக்குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதான உடன்படிக்கைக்கு கொண்டு வந்ததில் ரவியின் பங்களிப்பு மிக மிக முக்கியம். இதனை அடுத்து நாகலாந்தில் மட்டும் அல்லாமல் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்ப ரவி ஒரு காரணமானார்.
ஐபிஎஸ் அதிகாரி, கேரளாவில் 10 வருடம் பணியாற்றியவர், உளவு பார்ப்பதில் கில்லாடி, மோடியின் ஆல் டைம் பேவரைட் என தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி குறித்த தகவல்கள் அனைத்தும் விறுவிறப்பானதாக உள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதலே ஆளுநர் மாற்றம் இருக்கும் என்று ஆரூடம் சொல்லப்பட்டு வந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று அறிவிப்பே கூட வெளியானது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆர்.என்.ரவி என்பவரை தமிழகத்தின் ஆளுநராக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராகியுள்ள ஆர்.என் ரவி பீகாரை பூர்வீகமாக கொண்டவர். 1976ம் ஆண்டு ஐபிஎஸ் பாஸ் ஆனவர். அத்துடன் கேரள கேடராக அந்த மாநிலத்தில் சுமார் 10 வருடங்கள் காவல் பணியில் இருந்தவர் ரவி. தொடர்ந்து மத்திய அரசின் உளவுத்துறையில் பணியில் இணைந்த ரவி, அசாதாரண சூழல் நிலவும் மற்றும் வன்முறை மிகுந்த பகுதிகளில் பணியாற்றியவர். குறிப்பாக ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் உளவுத்துறை அதிகாரியாக ரவி இயங்கியுள்ளார். இவரது உளவுத்திறமை காரணமாக பல்வேறு உயர் பதவிகளிலும் இருந்துள்ளார். உளவுத்துறையின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி கடந்த 2012ம் ஆண்டு ரவி ஓய்வு பெற்றார். ஆனால் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு ஆர்.என்.ரவிக்கு அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.
2014ம் ஆண்டு பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் மிக முக்கியமான மற்றும் திறமையான அதிகாரிகளை கொண்டு புதிய டீம் அமைக்கப்பட்டது. இந்த டீமில் உளவுத்துறையின் பங்களிப்பதாக அழைக்கப்பட்டவர் தான் ஆர்.என்.ரவி. அப்போது முதலே பிரதமர் அலுவலகத்தில் முக்கிய இடம் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் பிரதமர் அலுவலகத்தின் இணை உளவுத்துறை குழுவிற்கு தலைவராகவும் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டார். இந்த புதிய பதவியில் ரவியின் திறமையை பார்த்து மோடி கடந்த 2018ம் ஆண்டு புரமோசன் வழங்கினார். அதுவும் நாட்டின் துணை பாதுகாப்பு ஆலோசகர் பதவி ரவிக்கு தேடி வந்தது. இதற்கு காரணம் ரவி மோடியின் பேவரைட் அதிகாரி என்பது தான்.
ஏனென்றால் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல் மோடிக்கு மிக மிக நெருக்கம். அந்த வகையில் அஜித் தோவலுக்கு துணையாக ஒருவர் வேண்டும் என்றால் மோடி எந்த அளவிற்கு ரவி மீது நம்பிக்கை வைத்திருந்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ளலாம். அத்தோடு வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக நாகலாந்து மாநிலத்தில் வன்முறையை முடிவிற்கு கொண்டு வரும் பணி இவருக்கு கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து நாகா போராளிக்குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதான உடன்படிக்கைக்கு கொண்டு வந்ததில் ரவியின் பங்களிப்பு மிக மிக முக்கியம். இதனை அடுத்து நாகலாந்தில் மட்டும் அல்லாமல் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்ப ரவி ஒரு காரணமானார்.
இதனை அடுத்து ரவிக்கு மேலு ஒரு புரமோசனாக நாகலாந்து மாநிலத்திற்கே ஆளுநராக நியமிக்கப்பட்டார். நாகலாந்து போன்ற சிறிய மாநிலத்தின் ஆளுநராக இருந்து தற்போத இந்தியாவின் மிக மிக முக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்திற்கு உயர் பொறுப்பிற்கு ரவி வந்துள்ளார். மோடியுடன் நெருக்கம், உளவுப் பின்னணி, பிரிவினை பேசுபவர்களுக்கு சிம்ம சொப்பனம் என ரவிக்கு பல முகங்கள் உண்டு. தமிழகத்திலும் கூட நீண்ட காலமாகவே பிரிவினை பேசும் பலர் உள்ளனர். அதிலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பிரிவினைவாதிகள் ஊக்கம் பெற்றதாக கருதி நடமாட்டத்தை அதிகரித்துள்ள நிலையில் ரவி கிண்டி ராஜ்பவனுக்கு வருகிறார். இனி என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.