Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்துக்கும் அதே நிலைமை வருமா? பீதியை கிளப்பி எச்சரிக்கும் பண்ருட்டி வேலு...

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது மாபெரும் ஜனநாயகப் படுகொலை எனவும், இந்த நிலை தமிழகத்திற்கும் ஏற்பட வெகு காலமாகாது என்பதை எச்சரிக்கையாக தமிழக மக்கள் முன் வைக்கிறோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Velmurugan warns tamilnadu people
Author
Chennai, First Published Aug 7, 2019, 4:07 PM IST

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது மாபெரும் ஜனநாயகப் படுகொலை எனவும், இந்த நிலை தமிழகத்திற்கும் ஏற்பட வெகு காலமாகாது என்பதை எச்சரிக்கையாக தமிழக மக்கள் முன் வைக்கிறோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 1947 ஆகஸ்ட் 14, 15ந் தேதிகளில் பாகிஸ்தான், இந்தியா என்ற இரு நாடுகள் சுதந்திரம் பெற்ற சூழலில் அண்டை நாடாக இருந்தது காஷ்மீர். மன்னர் அரிசிங் என்பவரால் ஆளப்பட்டுவந்த அந்தக் காஷ்மீர் தங்களுக்கே என்று கூறி பாகிஸ்தானின் ஒரு பிரிவினர் அதன் மீது படையெடுத்தனர். மன்னர் இந்தியாவின் உதவியை நாட, இந்தியப் படையினரும் பாகிஸ்தானின் அந்தப் பிரிவினரும் மோதிக் கொண்டனர்.

இந்த சண்டையில் பாகிஸ்தானியர் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டனர்; அதை ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கின்றனர். அதை இந்தியா POK - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிறது. அப்போது மன்னர் அரிசிங்கிற்கும் இந்திய அரசுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் அரிசிங் 26.10.1947இல் கையெழுத்திட்டார்.

இந்தியா சார்பில் அன்றைய வைசிராய் மவுண்ட் பேட்டன் 27.10.1947இல் கையெழுத்திட்டார். ஒப்பந்தத்தில் "காஷ்மீரின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கிறோம். காஷ்மீரிலிருந்து இந்தியப் படையை விடுவித்துக் கொள்வோம். காஷ்மீர் யாருடன் இருப்பது என்பதை காஷ்மீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்ற உறுதி கூறப்பட்டிருந்தது. இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அளித்திருந்த இந்த உறுதிமொழியை, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கும் 31.10.1947 அன்று தந்தி மூலம் அவர் அளித்தார். 

பின்னர், 20.08.1953 அன்று டெல்லியில் இந்தியப் பிரதமர் நேருவும் பாகிஸ்தான் பிரதமர் முகமது அலி போக்ராவும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாகிஸ்தானோடு இருக்க விரும்புகிறார்களா அல்லது தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா என்பது பற்றி காஷ்மீரிலும், POKகிலும் "கருத்து வாக்கெடுப்பு" (Plebiscite) நடத்தப்படும் என்று உறுதியளித்தார்கள். 

இதைத் தொடர்ந்து நடைபெற்ற மேலும் பல அரசியல் நிகழ்வுகளுக்குப் பின்தான் காஷ்மீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள்படி சிறப்புரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி, காஷ்மீர் சட்டப்பேரவை - அம்மாநிலத்தின் அரசமைப்பு அவையும் (அரசியல் நிர்ணய சபையும்) ஆகும்; காஷ்மீருக்கு இந்திய அரசுக் கொடியும் உண்டு, மாநில அரசின் தனிக்கொடியும் உண்டு; காஷ்மீரில் வெளி மாநிலத்தவர் நிலம் போன்ற சொத்துகளை வாங்கத் தடை, வெளி மாநிலத்தவர் குடியுரிமை பெறத் தடை உள்ளிட்ட சிறப்புரிமைகள் உண்டு. 

இந்த உரிமைகள் அனைத்தையும் இன்று திடீரென, லட்சக்கணக்கில் ராணுவத்தைக் குவித்து, அரசியல் கட்சித் தலைவர்களைச் வீட்டுச் சிறைவைத்து பறித்துக் கொண்டிருக்கிறது பாஜக மோடி அரசு. காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் என்று யூனியன் பிரதேசம், லடாக் என்ற யூனியன் பிரதேசம் என மாற்றியிருக்கிறது. இது ஒரு மாபெரும் ஜனநாயகப் படுகொலை! இதனை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இந்த நிலை தமிழகத்திற்கும் ஏற்பட வெகு காலமாகாது என்பதை எச்சரிக்கையாக தமிழக மக்கள் முன் வைக்கிறோம். இவ்வாறு வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios