Asianet News TamilAsianet News Tamil

இனப்படுகொலையாளனுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு.. ராணுவ மரியாதை..! ராஜபக்சே வருகையில் கொந்தளிக்கும் வேல்முருகன்..

இனக்கொலை புரிந்த ராஜபக்சேவை 2014இல் மோடி முதல் முறை பிரதமர் பதவியேற்பின்போதும் 'மாப்பிள்ளைத் தோழன்' என்பதற்குச் சமமாக அழைத்து ராஜபாட்டை வரவேற்பை அளித்தார்; இப்போது 2020இலும் அழைத்து ராணுவ மரியாதை, சிவப்புக்கம்பள மரியாதை அளித்திருக்கிறார். கோத்தபயவை அதிபரான கையோடே அழைத்து மரியாதை செய்துவிட்டார்.

velmurugan condemns visit of rajapakse to india
Author
Coimbatore, First Published Feb 9, 2020, 4:07 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபரானார். அதிபரான கோத்தபய ராஜபக்சே, தன் சகோதரரான மகிந்த ராஜபக்சேவையே உடனடியாகப் பிரதமர் ஆக்கினார். உடன்பிறந்தவர்களான இவர்கள் இருவருமே முன்பும் இலங்கையின் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்களே. அதாவது, இப்போதைய பிரதமர் மகிந்த முன்பு அதிபராக இருந்தார்; அவருக்குக் கீழ் ராணுவத்தை இயக்கும் பொறுப்பான பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தார் இப்போதைய அதிபர் கோத்தபய. இருவரும் சேர்ந்துதான் தமிழினப் படுகொலையைச் செய்து முடித்தார்கள்; சர்வதேசச் சட்டப்படி போரில் பயன்படுத்தக்கூடாத பேரழிவு ரசாயனக் குண்டுகளை தமிழர் பகுதிகளில் பொழிந்து லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்தனர்.

velmurugan condemns visit of rajapakse to india

தமிழர் என்கிறபோது அவர்கள் மோடி பிரதமராயிருக்கும் இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ்நாட்டிலும் வாழும் தமிழ்த் தேசிய இனத்தவரின் தொப்புள்கொடி உறவுகளேயாவர். அப்படி இனக்கொலை புரிந்த ராஜபக்சேவை 2014இல் மோடி முதல் முறை பிரதமர் பதவியேற்பின்போதும் 'மாப்பிள்ளைத் தோழன்' என்பதற்குச் சமமாக அழைத்து ராஜபாட்டை வரவேற்பை அளித்தார்; இப்போது 2020இலும் அழைத்து ராணுவ மரியாதை, சிவப்புக்கம்பள மரியாதை அளித்திருக்கிறார். கோத்தபயவை அதிபரான கையோடே அழைத்து மரியாதை செய்துவிட்டார். நாம் இதைக் குறிப்பிடுகிறோம் என்றால் அதற்கு நியாயமான காரணம் உண்டு. மனித உரிமை மீறல் குற்றத்திலேயே மிகக் கொடூரமான இனப்படுகொலையையே செய்ததற்காக ஐநா அவையில் முறையிடப்பட்டு இருவர் மீதும் விசாரணை நடந்துவருவதுதான் காரணம். அப்படிப்பட்ட ராஜபக்சேவை இப்போதும் மோடி அழைக்கிறார் என்றால் அதற்கும் காரணம் உண்டு.

velmurugan condemns visit of rajapakse to india

பிரதமரான நாளிலிருந்தே மோடி எடுத்த மக்கள் விரோத, அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகள் யாவும் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றன. பண மதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, காஷ்மீர் தன்னாட்சி அதிகார சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக், குடியுரிமைத் திருத்த சட்டம் (சிஏஏ) ஆகிய இவை அவரை உண்டு-இல்லை என்று பார்ப்பதாயிருக்கின்றன. இதில் சிஏஏ அவரைப் பிரதமர் பதவியினின்றும் அகற்றியே தீரும் என்கிற அளவுக்கு கடுமையாக இருக்கின்றது. இத்தகைய வேண்டாத நிலை மட்டுமல்ல; நாட்டில் தலைகுப்புர வீழ்ந்துவிட்ட பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதும் மோடிகளால் முடியாத காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்ட பொருளாதாரத்தால் தலைவிரித்தாடும் விலையேற்றம், வேலையின்மை, பணவீக்கம், பணப்புழக்கமின்மையோ நாட்டை வாட்டி வதைக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இல்லாத இந்த அவலத்திலிருந்து நாட்டை மீட்பது அப்படியொன்றும் எளிதான காரியமில்லை என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.

velmurugan condemns visit of rajapakse to india

என்றுமில்லாத இத்தகைய நிலையிலிருந்தும் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவே சர்ச்சைக்கிடமான, ஆபத்திற்கிடமான, மதக்காழ்ப்பிற்கிடமான நடவடிக்கைகளை வேண்டுமென்றே எடுக்கிறார் மோடி. இத்தகு நடவடிக்கைகள் அவரது வழக்கமான கார்ப்பொரேட் ஆதரவு நடவடிக்கைகளை விடவும் காட்டமாக அவரைத் தாக்கத் தொடங்கிவிட்டதுதான் உண்மை. இந்த நிலையில் மோடி குறித்த ஒன்னொரு செய்தியும் வந்து, மிச்சமீதியாக கொஞ்சூண்டு இருக்கும் அவரது பெயரையும் கெடுப்பதாக இருக்கிறது. அது, 'நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது' என்பது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார். அப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) குறித்து எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதில் மோடி குறிப்பிட்ட ஒரு வார்த்தை ஏற்கத் தக்கது அல்ல என்று அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு. பிரதமரின் வார்த்தைகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது மிகமிக அரிதான செயலாகவே பார்க்கப்படுகையில், மோடியின் வார்த்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது இதுவே முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2018இல் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத் குறித்துப் பேசிய வார்த்தை மிகமிகத் தரம் தாழ்ந்ததாக, இழிவாக இருந்ததால் அந்த வார்த்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இப்படி அவைக்குறிப்பிலிருந்து அவரது வார்த்தைகள் அவரது ஆட்சியின்போதே நீக்கப்படுவதானது, அவர் வகிக்கும் மிக உயர்ந்த பதவிக்கு அவர் தகுதியானவர்தானா என்ற கேள்வியையே எழுப்பியிருக்கிறது 

இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios