தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம்..! அழைப்பு விடுத்த வேல்முருகன்
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசை கண்டித்து சென்னை விமானநிலையத்தில் வருகிற 8ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம்
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க டெண்டர் வெளியிட்ட மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடலூர் - அரியலூர் – தஞ்சாவூர் - திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கிழக்கு சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி ஆகிய மூன்று வட்டாரங்களில்,
எந்தெந்த கிராம விளை நிலங்களுக்குக் கீழே எவ்வளவு பழுப்பு நிலக்கரி இருக்கிறது, எவ்வளவு பரப்பளவில் இருக்கிறது என்பது உட்பட பல விவரங்களை வெளியிட்டுள்ளது.வடசேரி பழுப்பு நிலக்கரி வட்டாரம் எனப் பெயரிட்டு, அப்பகுதியில் நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகளும், அரியலூர் மாவட்டம் – உடையார்பாளையம் வட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரி வட்டாரத்தில், இத்திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
மீத்தேன் எடுக்க நிரந்தரத் தடை
நிலக்கரி மற்றும் மீத்தேன் எடுக்கத் தனியார் நிறுவனங்கள் ஏலம் கேட்க அழைப்பு விடுத்துள்ள ஒன்றிய அரசின் சுரங்கத்துறை, ஏலம் கேட்கக் கடைசி நாள் 2023 மே 30 என்று அறிவித்துள்ளது. மேலும், நிலக்கரிச் சுரங்கத்றையின் தேர்வுக்கழு 2023 சூலை 14 அன்று தேர்வு செய்யப்பட்ட ஏலதாரர் பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பும் என்றும் சுரங்கத்துறை ஏல அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காவிரி டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களில் மீத்தேன் எடுக்க ஒன்றிய அரசு ஆழ்குழாய்களை இறக்கியது. அப்போது விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்த ஐயா நம்மாழ்வார் அவர்கள், ஆழ்குழாய்களை பிடிங்கி எறிந்தார். இதனையடுத்து, அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள், 2015இல் மீத்தேன் எடுக்க நிரந்தரத் தடை விதித்து ஆணையிட்டார்.
டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும்
தமிழ்நாட்டு மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தின் எதிரொலியாக, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், 2020 பிப்ரவரியில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.ஆனால், தற்போது பழுப்பு நிலக்கரி மற்றும் மீத்தேன் போன்ற எரிபொருட்களை எடுக்க ஒன்றிய அரசு சுரங்கத்துறை ஏல அறிவிப்பு வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசின் அறிவிப்பின் படி, சுரங்கங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் தொடக்கப்பட்டதால், நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் ஆபத்து ஏற்படும்.அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, தமிழ்நாட்டை சிதைத்து, தமிழர்கள் வாழ தகுதியற்ற நிலமாக மாறும் பேராபத்து ஆகும்.
கருப்பு கொடி போராட்டம்
நிலக்கரி ஏல அறிவிப்பை முழுவதுமாகத் திரும்பப் பெறக்கோரியும், காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நீடிக்க கோரியும், வருகிற 8ஆம் தேதி, தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் மாபெரும் போராட்டத்தை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்துகிறது. சென்னை விமானநிலையத்தில் வருகிற 8ஆம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் இந்த போராட்டத்தில், அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், தன்னார்வலர்களும் பங்கேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்வதாக வேல்முருகன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
பாஜகவில் 4 மடங்காக உயர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை.! தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்-அண்ணாமலை உறுதி