தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்திருந்த நிலையில் திருப்பத்தூரில் உள்ள  பெரியார் சிலையை பாஜகவைச் சேர்ந்த சிலர் உடைத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்தது. அங்கு பாஜ வெற்றி பெற்றது. பண பலம், அதிகார பலம், பிரிவினை வாதம் போன்றவற்றை தூண்டிவிட்டு பாஜக வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை பாஜகவினர் அகற்றினர். மாநிலம் முழுவதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள்  உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ராஜாவின் இந்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன், திருமாவளவன்,சீமான், திருநாவுக்கரசர் போன்ற தலைவர்கள் ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை நேற்று இரவு பாஜகவைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் உள்ளிட்ட சிலர் உடைத்தனர்.

இதைப்பார்த்த அப்பகுதி பொது மக்கள் முததுராமன் உள்ளிட்ட பாஜகவினரை பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.