ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்புகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

வேலூர் மக்களவைத் தேர்தல், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால், அரசியல் தலைவர்கள் வேலூரில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில், துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு திமுக தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும், எனவே திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுறது. 

இந்நிலையில், முன்கூட்டியே எந்தவித அனுமதியும் இல்லாமல், இஸ்லாமிய தலைவர்களுடன் தனியார் மண்டபத்தில் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.