வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றது திமுக அல்ல அதிமுக தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

சென்னை வண்டலூரில் உயிரியல் பூங்காவில் பிறந்த 4 புலிக்குட்டிகள் மற்றும் 3 சிங்கக் குட்டிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் சூட்டினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெறும் என கூறினார். 

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாகவே கருதப்படுகிறது. வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மதம் ஜாதி அடிப்படையில் ஆட்சி செய்யவில்லை. கிருஷ்ணா நதியில் 8 டி.எம்.சி  தண்ணீரை திறந்துவிட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இசைவு தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் சார்பில் ஆந்திர முதல்வருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் என்றார். 

மேலும், நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர், அங்கு அமைச்சர் உதயக்குமார் தலைமையில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறினார்.