நடந்து முடிந்த வேலூர் மக்களவை தொகுதியில் தாம் தோல்வியடைந்ததற்கு முத்தலாக் சட்டமும், 370-வது பிரிவை நீக்கியதும் காரணம் என ஏ.சி சண்முகம் அதிரடியாக கூறியுள்ளார். 

வேலூர் மக்களவை தேர்தலில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்- 4,77,199 வாக்குகளும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி - 26,995 வாக்குகளும் பெற்றனர். கடுமையான போட்டிகள் இடையே 8141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இதனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதால் கடும் மனஉளைச்சலில் ஏ.சி.சண்முகம் இருந்து வந்தார்.  

இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.சி சண்முகம் வேலூர் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தோல்வி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் முத்தலாக் சட்டமும், 370-வது பிரிவை நீக்கியதும் தான் என் தேர்தல் தோல்விக்கு காரணம் என்றார். 

முக்கியமாக வாணியம்பாடியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் - 90,718 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 68,923 வாக்குகள் பெற்றனர். 21,795 வாக்குகள் திமுக அதிகமாக பெற்றுள்ளது. அதேபோல் வேலூர், ஆம்பூர் தொகுதியிலும் இதே நிலைமை தான். ஆகையால், தனது வெற்றியை பறித்தது அதிமுக மற்றும் பாஜவும் தான் என ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.