வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக . சார்பில் கதிர்ஆனந்த் மற்றும் , நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என மொத்தம்  28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று எண்ணப்படுகிறது. இதனையொட்டி அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையினை அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒவ்வொரு வேட்பாளரின் சார்பிலும் முகவர் ஒருவர் நியமிக்கப்படுவார். இது தவிர உதவி தேர்தல் அலுவலர் மேஜையில் கூடுதலாக ஒரு முகவர் இருப்பார். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை காலை 7.30 மணியளவில் வேட்பாளர்கள், முகவர்கள் பொது தேர்தல் பார்வையாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்படும். அதன்பின் 8 மணியளவில் தபால் வாக்குகளும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஒரேநேரத்தில் எண்ணப்படும்.

காலை 7 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணிக்கை நடைபெறும். முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு பின்னர் தெரிய வரும். வெற்றி பெறும் வேட்பாளர் பற்றிய இறுதி நிலவரம் இரவு வரை தாமதம் ஆகலாம். ஓட்டு எண்ணிக்கை நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 1,073 போலீசாரும், 100 பேர் அடங்கிய ஒரு கம்பெனி துணை ராணுவ படையினரும் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது..