வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக போட்டியிடமால் ஒதுங்கிக் கொண்டதற்கு ‘அதிமுகவின் வளைப்பு’ விஷயமே காரணம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம், நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உள்பட பலர் போட்டியிடுகிறார்கள். இத்தேர்தலில் அமமுக சார்பில் கடந்த ஏப்ரலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுச் சின்னம் கிடைத்த பிறகே தேர்தலில் போட்டி என்றும், அதனால், வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திடீரென அறிவித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 நாடாளுமன்றம் மற்றும் இடைத் தேர்தலில் அமமுக தோல்வி அடைந்த பிறகு முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுக, அதிமுகவில் இணைந்துவருகிறார்கள். குறிப்பாக அமமுகவில் உள்ளவர்களை இழுப்பதில் அதிமுக ஆர்வம் காட்டிவருகிறது. அந்த வகையில் வேலூரில் அமமுக வேட்பாளரை தினகரன் அறிவித்தால், அந்த வேட்பாளாரை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. 
கடந்த ஏப்ரலில் போட்டியிஒட்ட முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கனிடம் இதுதொடர்பாக அதிமுக தரப்பு பேசியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் தினகரனுக்கு முன்கூட்டியே தெரிந்ததால், வேலூர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. வேட்பாளரே கட்சி மாறினால், பெரிய பின்னடைவாக அமைந்துவிடும் என்பதால், தினகரன் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தினகரன் அறிவித்துவிட்டதால், முன்னாள் அமைச்சரை இழுக்கும் வேலையையும் அதிமுக தரப்பு அப்படியே விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த முன்னாள் அமைச்சர் அமமுகவில் சேருவதற்கு முன்பு, தீபா நடத்திவந்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.