சென்னையில் தடையை மீறி 2வது நாளாக வேல் யாத்திரையை தொடங்கிய பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜக சார்பில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை தொடங்கியது. எனவே, வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தி, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகளை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், தடையை மீறி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை தொடரும் என எல்.முருகன்அறிவித்திருந்தார். அதன்படி 2வது நாள் யாத்திரையை இன்று சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு வரை யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து 2வது நாளாக வேல் யாத்திரை துவங்க முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

முன்னதாக வேல் யாத்திரைக் கூட்டத்தில் பேசிய எல்.முருகன், அடுத்து அமையவுள்ள ஆட்சியைத் தீர்மானிக்கப்போவது பா.ஜ.க. தான். வரும் தேர்தலில் பா.ஜ.க. தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கப்போகிறது .எத்தனை தடை வந்தாலும் அனைத்து ஊரிலுமுள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வேல் யாத்திரை வெற்றியடையும் என்றார்.