veerbadra singh
இமாச்சல முதல்வர் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்…சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகஇமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.
2009 முதல் 2011ம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக வீரபத்ர சிங் இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.1 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறி சி.பி.ஐ.வீரபத்தர சிங், அவரின் மனைவி பிரதிபா சிங், உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.14 கோடி சொத்துக்களையும் முடக்கியது. இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அமலாக்கப்பிரிவினர், தனியாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை வீரபத்ரசிங், அவரின் மனைவி, மகன் ஆகியோர் மீது பதிவு செய்தனர். அதில், ரூ. 10 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்துக்கள் சேர்த்ததாக அமலாக்கப்பிரிவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கப்பிரிவினர் நேற்று அவருக்கு சம்மன் அனுப்பினர்.
வரும் 13-ந்தேதிக்குள் அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் இதேபோல சம்மன் அனுப்பப்பட்டபோது, சில அலுவல்கள் காரணமாக அவர் ஆஜராவதில் இருந்து முதல்வர் வீரபத்ரசிங் விலக்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
