திராவிடர் கழகம் பிறந்த சேலத்தில், அதே ஆகஸ்டு 27 இல் (1944) திராவிடர் கழக பவள விழா மாநில மாநாடு நடைபெறுகிறது. குடும்பம் குடும்பமாக வாரீர், வாரீர்!  என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் எழுதியிருக்கும் கடுதாசியில்; அருமைக் கழகக் குடும்பத்தினர்களே, கொள்கை உறவுகளே, தோழமையினரே, அனைவருக்கும் வணக்கம். இடையில் ஏற்பட்ட உடல்நலிவிலிருந்து மீண்டு, நலம் பெற்றுக் கடமையாற்றிடும் முழுத் தகுதி அடைந்துள்ளேன். உடல்நலம் என்பது பெரிதும் மனநலம் - மனத் திண்மையைப் பொறுத்ததும், அலட்சியம் காட்டாமல் இருப்பதுமேயாகும்.

குற்றாலத்தில் இவ்வாண்டும் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறை மிகச் சிறப்புடன், பரிபக்குவமடைந்த இருபால் மாணவத் தங்கங்கள் பெரிதும், வகுப்புப் பாடங்களை உள்வாங்கி நன்கு பயன்பெற்றனர். எல் லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது!

நமது வள்ளல் வீகேயென் இல்லாத குறையை அவரது மூத்த மகன் பொறியாளர் கேப்டன் இராஜா அவர்களும், அவரது ஊழியத் தோழர்களும் நீக்கினர். அவரது மாளிகையில் பயிற்சி முகாம். தென்பகுதி அமைப்பாளர் மதுரை வே.செல்வம் ஏற்பாட்டில் எவ்வித குறையுமின்றி சிறப்புற நடைபெற்றது. பேராசிரியர்களை ஒருங் கிணைத்து வகுப்புகளை நடத்திட கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திர சேகரன் சிறப்பாக ஏற்பாடு செய்தார். (நமது  நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்களின் பட்டியல் தனியே காண்க).

வரலாறு படைக்கவிருக்கும் திராவிடர் கழக சேலம் பவள விழா மாநாடு

சேலத்தில் நாம் திட்டமிட்டு வருகின்ற ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று (1944 ஆகஸ்ட் 27 இல்தான்) சேலத்தில் நீதிக்கட்சி மாநாட்டில் - பெயர் மாற்றத்திற்கும், கொள்கைத் திட்ட மாற்றத்திற்கும் ஆளாகி, திராவிடர் கழகமாக பதவி நாடாத, வெகுமக்களின் சமுகப்புரட்சி இயக்கமாக மாறியது. தந்தை பெரியார் என்ற நம் அறிவு ஆசானின் அரும்பெரும் சிந்தனையாலும், செயல்திறத்தாலும்  உருமாற்றப்பட்டு, இப்படி ஒரு மகத்தான - ஆட்சிக்குப் போகாது - அதேநேரத்தில்,  ஆட்சிகளை வயப்படுத்தி, மக்கள் நலம் சார்ந்தவை யாக்கும் செல்வாக்குச் செழுமையுடன் இருக்கும் இயக்கம் - ஒரே இயக்கம் (கட்சி' அல்ல கவனிக்கவும்) நம்முடையதே என்று நிறுவனத் தலைவர் தந்தை பெரியார், பெருமைப்பட்ட இயக்கம்.

எத்தனை இடர்களும், சோதனைகளும், எதிர்ப்புகளும் வந்தாலும், அவை மலை போல் வரினும் பனிபோல் கரைந்து செல் லும் வகையில், எதிர்கொண்டு வாகை சூடிடும் இயக்கம் திராவிடர் கழகம் - அன்றும், இன்றும், என்றும்!

இன்று அய்யாவும், அம்மாவும் உருவ மாக இல்லை. ஆனால், அவர்கள் தந்த பயிற்சியும், நம்முள் ஏற்படுத்திய பக்கு வமும், நம்மை விட்டு என்றும் அகலாத- சிக்கெனப்பற்றிய சீலங்கள்' கொண்ட இயக்கம் ஆகும்! எனவேதான், எந்நிலை யிலும் நம்மிடம் ஓலம் இல்லை; ஒப்பாரி இல்லை; காலம் அதனை ஞாலத்திற்குக் காட்டியே வருகிறது!

1944 இல் சேலம் மாநாடுபற்றி அறிஞர் அண்ணா தனது திராவிட நாடு' ஏட்டில் (13.8.1944) "சேலம் - செயல் ஆற்றும் காலம்'' என்ற தலைப்பில் ஒரு அருமையான தலை யங்கம் தீட்டினார். திருப்புமுனையுடன் திண்தோள் வீரர்கள் கிளர்ந்து, தமது நன்றி பாராட்டாத, மானம் பாராத, எதிர்ப்புக்கும், ஏளனத்திற்கும் அஞ்சாது பணியாற்றும் கருஞ்சட்டை வீரர்கள், சுயமரியாதைச் சூட்டைத் தணியவிடாமல் உழைத்தனர்; இன்றும் உழைத்துக் கொண்டே உள்ளனர்!

இன்றைய சூழலில் நம் இன எதிரிகள் தமிழ்நாட்டைக் குறி வைத்து, பெரியார் மண்ணை அபகரித்து, திராவிடத்தை வீழ்த்தி ஆரியவர்த்தமாக்கிட'' சாம, பேத, தான, தண்ட அத்துணை முறைகளையும், சூழ்ச்சி வியூகங்களையும், கண்ணிவெடி களையும் வைத்து வருகின்றனர்.

வன்முறை தவிர்த்த அறிவாயுதங்கள்  ஈரோட்டுப் பட்டறையில் தயாரானாவை, சக்தி வாய்ந்தவை என்பதை, ஒளிவு மறைவு, ரகசியம் இல்லாத திறந்த புத்தகம் போன்ற இவ்வியக்கம், அதன் உறுதி கொண்ட கருஞ்சிறுத்தைகளாகவும், கருப்பு மெழுகுவத்திகளாகவும் என்றும் களத்தில் நின்று வென்று காட்ட ஆயத்தமாவோம், அணியமாவோம்!

ஊருக்கு உழைக்கும் நாம் பாருக்கு (உலகுக்கு) உழைக்கவேண்டியது காலத் தின் கட்டாயமாகிவிட்டது. அதன் எதி ரொலிதான் செப்டம்பரில் 21, 22 இல் பெரியார் பன்னாட்டு மய்யமும், அமெரிக்க மனிதநேய இயக்கமும் இணைந்து நடத்தும் இரு நாள் பன்னாட்டு மாநாடும், கருத் தரங்கமும்! அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகில்!

பெரியார் - வரலாற்றுக் குறிப்பான - 1973  டிசம்பர் 24 இல்  மறைந்தாலும் - இன்றும் - என்றும் நம் நெஞ்சில் நிறைந்தார் ஆவார். காரணம், அவர் தனி மனிதரல்ல - தகத்தகாய ஒளிவீசும் தத்துவம்! கொள்கை! லட்சியம்!

எனவே, சேலத்தில் நாம் அனைவரும் குடும்பம் குடும்பமாக தவறாது சந்தித்தாக வேண்டும். நம் வாழ்வில் இதைவிட தவிர்க்கக் கூடாத மாபெரும் கொள்கைத் திருவிழா வேறு உண்டா?

இன்னும் இரண்டே வாரங்கள்தான் - இடையில் 15 நாள்களே! ஆயத்தமாகி விட்டீர்களா? குடும்பத்தோடு பெரியார் பிஞ்சுகள் உள்பட சேலத்தில் கூடி பவள விழாவை பார் போற்றும் விழாவாக்கிடுவீர்!

ஏற்பாடுகளைச் செய்யுங்கள் - கஜாப் புயலால் தஞ்சைக்கு வராதவர்கள்கூட, வாஞ்சை பொங்க செயல் உருகொண்டு வரலாற்றில் இணையவிருக்கும் இயக்கத்தின் பொன்னேட்டிற்கு உங்களின் வருகை பளிச்சென பங்கு வகிக்கட்டும், அருமை இருபால் தோழர்களே! வாரீர்! வாரீர்!! வாரீர்!!! உங்கள் வருகையைக் காணக் காத்திருக்கும், என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.