ஒரே நாடு, ஒரே மதம் என்பவர்கள் அனைவரும் ஒரே மக்கள் என்று கூறி, அதற்குத் தடையாக இருக்கும் ஜாதியை ஒழித்து, சட்டத் திருத்தம் கொண்டுவரத் தயாரா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  

இந்திய நாட்டில்,

ஒரே தேசம்,

ஒரே மொழி,

ஒரே சிவில் சட்டம்,

ஒரே தேர்தல்,

ஒரே ரேஷன் கார்டு

என்று அறிவித்துக் கூறும் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு ஜாதியை - வர்ணத்தை ஒழித்து, ஒரே மக்கள் - அனைவரும் சரிநிகர்  மக்கள் - அனைவரும் சரிசமம் என்று கருதி ஆயிரம் உண்டிங்கு ஜாதி என்பதை மாற்றி, சட்டம் கொண்டு வர ஏன் முன்வரவில்லை?

ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்டத் திருத்தம் கொண்டு வரத் தயாரா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவில்,

தீண்டாமை ஒழிக்கப்படுகிறது'' என்ப தற்குப் பதிலாக, ஜாதி ஒழிக்கப்படுகிறது; அதை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தலும் குற்றம்'' என்று அறிவித்து, ஏன் சமத் துவத்தை, சகோதரத்துவத்தை நிலைநாட்ட முன்வரவில்லை?

இதற்கு யார் தடை? என்பது நமது முக்கியமான கேள்வி.

கோல்வால்கர் கூறுவது என்ன?

உடன் கிடைக்கும் பதில் இதோ!

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரின் 'அரசியல் வேத புத்தகமான' கோல்வால்கரின் 'ஞானகங்கை' (Bunch of Thoughts) என்ற நூலின் 162 ஆம் பக்கத்தில்,

நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பு ஆகும். இன்று இது ஜாதி வாதம் என்று கூறி, கேலி செய்யப்படுகிறது.

வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண் ணுகின்றனர். அந்த நால் வருண அமைப்பில் உருவாகிய சமுக அமைப்பினை, சமுக நீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.

சமுதாயம் என்பது இறைவனின் நான்கு வகைத் தோற்றங்கள் என்றும், அதனை அனைவரும் தத்தம் இயல்பிற்கேற்ற முறை யில், தமக்கே உரிய முறையில் வழிபட வேண்டும் என்றும் கூறி வந்தனர். அம் முறைப்படி,

பிறருக்கு ஞானம் வழங்குவதன்மூலம் அந்தணன் புகழ்பெறுகின்றான் எனில்,

பகைவனை அழிப்பதினால் க்ஷத்திரியன் புகழுடையோனாகப் போற்றப்படு கிறான் என்றும்,

தனது வாணிபத்தாலும், விவசாயத் தாலும் வளம்பெருக்கிய வைசியன் எந்த விதத்திலும் புகழ் குறைந்தவனாகக் கருதப் படுவதில்லை.

அதுபோன்றே தனது கைத்திறனால் சமுதாயத்திற்குச் சேவை செய்து வந்த சூத்திரனும் புகழ்மிக்கவனாய் கருதப்பட்டு வந்தான்!'' என்கிறார் கோல்வால்கர்.

இந்த ஒப்பனை' வார்த்தைகளில்கூட பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத் திரன் என்ற ஜாதி முறை - வருணாசிரம முறையை நியாயப்படுத்தி நிலை நாட்டு கிறார்கள்!

அப்பாவிகளை ஏமாற்ற திசை திருப்பும் விளக்கம்!

சிலர், அப்பாவிகளை ஏமாற்ற - திசை திருப்ப,

தலை - மூளை சிந்திக்கிறது!

இருதயம் - உயிர் காக்கிறது

உடலின் - மற்ற தனித்த வேலைகளை

கை, கால்கள் - செய்வதற்கும், நடப்ப தற்கும் என்பதுபோல என்றும் தவறான உதாரணம் கூறுகின்றார்கள்.

இந்த உறுப்புகள் எல்லாம் இணைந்து தானே உடலில் உள்ளன. ஒன்றின்மேல் இன்னொன்று பட்டால் தீட்டாகி'' விடுமோ? தீண்டாமை' உண்டா?

மற்றொரு ஏமாற்று திரிபுவாதம் -

இப்படி பல பணிகளைப் பிரித்திருப்பது Division of Labour தொழிலை - Specialise  செய்ய - தனித்தனியே பிரித்துக் கொள்வது போன்றே என்று ஒருமுறை கோல்வால்கர் சொன்னதற்கு, டாக்டர் அம்பேத்கர் பளிச்சென்று சொன்னார்,

‘‘It is not Division of Labour, it is a Division of Labourers'' பணியைப் பிரிக்கும் முறையில் பணி செய்வோரை பிரித்து மேல் - கீழ் உருவாக்கும் பேதம் வளர்க்கும் பேதமை ஏற்பாடு என்றார் அண்ணல் அம்பேத்கர்!

ஒரே மதம் ஹிந்து மதம் என்று கூற முடியுமா? ஷன்மதமாக' இருக்கிறதா - இல்லையா?

வடகலையும், தென்கலையும் ஒன்றாகுமா?

முதலில் சீர்மை Uniform Code அவர் களுக்குள்ளே கொண்டு வரத் தயக்கம் ஏன்?

'உயர்ஜாதி' என்று கூறினால் பெரும் பான்மையோர் என்று கூறி அணிவகுக்க முடியாது. வெகுச் சிறுபான்மை மட்டுமே; அதனால் பெரும்பான்மை காட்ட ஹிந்து மதப் போர்வை தேவைப்படுகிறது.

ஹிந்து மதம் அந்நியன் சூட்டிய பெயர்

ஹிந்து மதம் - அப்பெயர்கூட அந்நியன் தந்தது என்று காஞ்சி சங்கராச்சாரியார் (தெய்வத்தின் குரல்', முதல் பாகம், பக்கம் 267-268) போன்றவர்களே கூறியுள்ள நிலையில், அந்த பெரும்பான்மை என்று கூறி, மதவெறியினை ஒன்றிணைக்க முயலுமுன்னர் ஜாதியை ஒழிக்க முன்வர வேண்டாமா? ஹிந்து மக்களே ஒன்று சேருங்கள் என்று குரல் கொடுக்கும் ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அல்லவா இதை நமக்கும் முந்திக்கொண்டு போராட முன்வரவேண்டும்? இல்லையா?

வெறும் தீண்டாமை ஒழித்து சகோ தரத்துவம் கொண்டு வந்துவிட்டோம் என்று வெகுநேர்த்தியாக திசை திருப்பாதீர்!

ஜாதியை ஒழிக்காமல் சமத்துவம் மலருமா?

தீண்டாமையின் ஊற்றும், உயிர் நிலையும் ஜாதி! ஜாதி!! ஜாதி!!!

அதை ஒழிக்காமல்,

சமத்துவமோ,

சகோதரத்துவமோ,

சுதந்திரமோ,

சுகானுபவமோ

ஒருக்காலும் ஏற்படாது! ஏற்படாது!! ஏற்படாது!!!

இதைத்தான் திராவிடர் கழகமும், அதன் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியாரும் அன்று முதல் இன்றுவரை கேட்டுப் போராடும் களத்தில் உள்ளனர்!

இளைஞர்களே, சமத்துவ - சமுதாயம், சமதர்ம சமுதாயம் காண விரும்பும் தோழர்களே,

ஜாதி ஒழிப்பிற்குரிய இயக்கமாம் திராவிடர் கழகத்தில் சேர்ந்து போராட வாரீர்! வாரீர்!! வாரீர்!!! என கூறியுள்ளார்.