இந்திய இராணுவத் துறை நடத்தி வந்த இராணுவப் பயிற்சிப்  பள்ளிகளுக்குப் பதிலாக, ஆர்.எஸ்.எஸே இராணுவப் பள்ளிகளை இனி நடத்தும் என்ற ஏற்பாடு இராணுவத்தை ஹிந்துத்துவா மயமாக்கும் ஆபத்தான சூழ்ச்சி - இதனை முறியடித்தே ஆகவேண்டும்; எதிர்க்கட்சிகளும், இறையாண்மையில் நம்பிக்கை உள்ளவர்களும், தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிப்பதோடு மக்களிடத்திலும் கொண்டு செல்லவேண்டும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆட்சி வாய்ப்பைப் பயன்படுத்தி, உடனடியாக இந்தியாவை ஹிந்து ராஜ்ஜியமாக - ஹிந்துராஷ்டிரமாக ஆக்கி, ஹிந்துத்து வாவை எங்கனும் பரவிடச் செய்து நிலைநாட்ட வேண்டும் என்பதைத் திட்ட வட்டமாக்கிக் கொண்டு வெளிப்படை யாகவே ஆர்.எஸ்.எஸ். சிறிதும் தயக்கமு மின்றி, கூச்சநாச்சமுமின்றிப் பகிரங்க மாகவே இறங்கிவிட்டது.

புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற ஆயுதம்மூலம் கல்வித் துறையை காவி மயமாக்கிட, சமஸ்கிருத மயமாக்கிட, ஹிந்துத்துவ மயமாக்கிட தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு.

இராணுவ அதிகாரிகளாகப் பணிபுரிய மணவர்களைத் தயாரிக்கும் இராணுவப் பள்ளிகளை இதுவரை இந்திய இராணுவத் துறைதான்  நடத்தி வருகிறது.

இராணுவப் பள்ளியை ஆர்.எஸ்.எஸ். நடத்துவதா?

இப்பொழுது ஒரு தகவல் வந்துள்ளது - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்விப் பிரிவின் சார்பாக இராணுவப் பள்ளி உத்தரப்பிரதேசத்தில் 40 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படுகிறது. (இப்பணம், நன்கொடைகள்மூலம் திரட்டப்படுகிறது).  அதுவே ஒரு (தனியார்) இராணுவப்  பள்ளி (Sainik School) சைனிக் பள்ளி (உடு மலைப்பேட்டைக்கு அருகில் உள்ளதைப் போல், புனே கடக் வாசலாவில் உள்ளதைப் போல). அதில் மாணவர்களைச் சேர்த்துப் பயிற்சி கொடுத்து, அவர்களை இராணுவ அதிகாரிகளாக அக்கல்லூரி  உருவாக்கித் தருமாம்!  அந்தப் பள்ளிக்கு ராஜூ பையா (Raju Bhaiya) என்று பெயர் சூட்டப்படுமாம் (இவர் ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலை வர் என்பது குறிப்பிடத்தக்கது).  இதற்குரிய இடம் தந்தவர் ஆர்.எஸ்.எஸ்.காரரான ஓய்வு பெற்ற பிரின்ஸ்பால் அலேகோயல் என்பவர்.

ஆண்டுக்கு 1,120 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்களாம்! இதில் மாஜி இராணுவ அதிகாரிகள், வீரர்கள் பிள்ளை களுக்கு 56 இடங்கள் ஒதுக்கப்படுமாம். (இது அவர்களின் எதிர்ப்பு ஏற்படாமல் தடுக்க ஒரு தந்திரத் திட்டமும்கூட).

ஆர்.எஸ்.எஸ். பள்ளியிலிருந்து...

இத்துடன் ஆர்.எஸ்.எஸ். வித்தியா பாரதி அமைப்பினால் ஒரு தங்கிப் படிக்கும் (Residential School) (ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரையிலான) ஆர்.எஸ்.எஸ். பள்ளி, சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்கீழ் தொடங்கி நடத்தப்படுமாம். அதிலிருந்து இந்த இராணுவப் பள்ளிக்கு - சைனிக் ஸ்கூலுக்கு மாணவர்களைச் சேர்க்க அது ஒரு வாய்க்காலாக வழி வகுக்கவே இப்பள்ளி!

சாவர்க்காரின் திட்டமே!

ஹிந்துத்துவா கொள்கையின் செயல் வடிவத்திற்கு முதல் படி RSS-ன் இராணுவப் பள்ளி ஏற்பாடு.

‘‘Hinduize  military
Militarize Hindus''

என்பது ஹிந்துத்துவா' நூலில் வி.டி. சவர்க்காரின் கொள்கை முழக்கம். அதை ஆட்சி வாய்ப்பு கிடைத்தவுடன் இப்படி செய்யத் துணிந்துள்ளனர்.

இதுபோன்ற ஒரு முயற்சிக்காக ஹிந்து மஹா சபையைச் சேர்ந்த மூஞ்சே, இத்தாலி சென்று, முசோலினியைச் சந்தித்து  ஒரு ரகசிய உடன்பாடும் செய்தார் என்பதற்கு சில நூல்களில் ஆதாரம் உள்ளது. இதற்குக் கூறப்படும் காரணம் வேடிக் கையானது!

10,000 (பத்தாயிரம்) பேர் இந்திய இராணுவத் தேவையாக உள்ளதாம்! அப்படியானால், அதை இதுவரை செய்து வந்ததுபோல, இராணுவப் பள்ளி களை அரசே - இராணுவத் துறையே செய்யலாமே!

மற்ற தனியார்க் கல்வி நிறுவனங்களுக்கும்  வாய்ப்பு அளிக்கலாமே! தனியார் கல்வி அமைப்புகள் நடத்த லாம் என்று விளம்பரம் செய்து, நாட்டின் நாலாபக்கங்களிலும், எல்லா திசைகளிலும் பரவாக 10 சைனிக் பள்ளிகளை ஏற்படுத்தலாமே! கமுக்கமாக வைத்து உ.பி.யில் ஆர்.எஸ்.எசு.க்கு மாத்திரம் அந்த ஏற்பாடு - உரிமை தருவானேன்?

சர்வமும் ஹிந்துத்துவா - சமஸ்கிருதம்  என்பதற்காக, ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளில் உள்ளவர்களை இராணுவத்தில் அதிகாரிகளாக ஆக்கிட, விசா' கொடுப்பது போன்ற ஏற்பாடுதானே இது.

மக்களிடம் செ(ர)ல்லுவோம்!

இராணுவப் பள்ளிமூலம் இதனைச் செய்வதன் சூட்சமம் புரிகிறதா? எதிர்க்கட்சிகளும், நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் இவைகளில் அக்கறையும், கவலையும் உள்ளவர்களும் இராணுவம் உள்பட சர்வமும் காவி மயமாக்கப்படுகிறது என்பதை மக்களிடம் விளக்கி, புரிய வையுங்கள்! இவ்வாறு அதில் கூறியுள்ளார்.