சித்த மருத்துவர் வீரபாபுவை அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்த மருத்துவ உலகமே கைவிரித்துவிட்ட கொரோனா நோய்த் தொற்றாளர்களை எல்லாம் நம்பிக்கையோடு சேர்த்துக்கொண்டு, குணப்படுத்தி அனுப்பியவர்.

அரசு தரப்பில், சாலிகிராமம் பகுதியில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததோடு நின்று கொண்டது. இதுவரை ஒத்த ரூபாயைக்கூட இவருக்குக் கொடுக்கவில்லை.
இன்றைய தேதிவரை 5,400 கொரோனா நோய்த் தொற்றாளர்களைக் குணப்படுத்தி அனுப்பி உள்ளார். பல நோயாளிகள் மரணிக்கும் தருவாயில் சென்று மீண்டுள்ளார்கள். நேரம் காலம் பார்க்காமல் இதயசுத்தியோடு பணி செய்து பலரையும் காப்பாற்றியுள்ளார். இவரிடம் சென்ற ஒரு நோயாளிகள்கூட இறந்ததில்லை என்பதே பெரும் சவலான ஒன்று.

சாதாரண ஏழைகளில் இருந்து, பெரும் கோடீஸ்வரர்கள் ஏன், அலோபதி மருத்துவத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களும், செவிலியர்ளுமே இவரிடம் சேர்ந்து உயிர் பிழைத்து சென்றுள்ளார்கள். இதுவரை யாரிடமும் ஒரு பைசாவும் வாங்கியதில்லை. அரசு தரப்பும் உதவி செய்யவில்லை. மிக மோசமான, உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த சிலரிடம் மட்டுமே சிறு தொகையை பெற்றுள்ளார். அதுவும் ஆக்ஜிசன் சிலின்டருக்காக... இதைக்கூட இந்த அரசு தரப்பு அவருக்கு வழங்கியிருக்கவில்லை.

இதுவரை 5,400 நோயாளிகள் குணம் அடைந்து வீடு சென்றார்களே... அவர்களுக்கு இதுவரையிலுமான மொத்த மருந்து செலவும் இவருடைய  சொந்த பணம்தான். இன்னும் எத்தனைக் காலத்திற்கு அவரே மருந்துகளை வாங்கி செலவு செய்துகொண்டிருக்க முடியும். தவிர, முழு நேரமும் இந்த நோயாளிகளுக்காக என்றே ஓடி ஓடி திரிந்து அலைந்து கொண்டிருந்ததில், சொந்த சம்பாத்தியமும் இல்லாமல் போயிற்று. குடும்பத்தைக் கவனிக்க வருமானமும் இல்லாமல், நோயாளிகளைக் கவனிக்க சொந்த கைக்காசை போட்டு சமாளிப்பது என்றால், எத்தனை மாதத்திற்கு சமாளிக்க முடியும்? 
அதனால், இதிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார் மருத்துவர் வீரபாபு. வருமானத்திற்காகவும், பிழைப்பிற்காகவும், தனியாக “பத்து ரூபாய்” மருத்துவமனை ஒன்றை சுயமாக தொடங்கி உள்ளார். 

இந்த கொரோனா நோய்த் தொற்றுக்காக பல ஆயிரக்கணக்கான கோடிகளை அதாவது தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது முதல், தொற்றுப் பரவல் தடுப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு என ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டிருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவத்திற்கான மருந்துகளை வாங்கவும்- பராமரிப்புக்கான செலவை செய்யவும், ஊழியர்களுக்கான பணத்தைக் கொடுக்கவும் மறுப்பதுதான், வேதனையான செயல்.