நீட் விவகாரம் ….தமிழகம் முழுவதும்  9 ஆம் தேதி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்த விடுதலைச் சிறுத்தைகள் அழைப்பு….

நீட் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 9-ம் தேதி நீட் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற உள்ளதா விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளின் போக்குகளைக் கண்டித்தும் நீட் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முழுவதும் நீட் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அனிதாவின் குடும்பத்திற்கு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ரூ. 7 லட்சத்தை வழங்குவதாக தமிழக முதலமைச்சர்  அதிர்ச்சியளிக்கிறது என்றும் இது வன்கொடுமைகள் நிகழ்கிற போது மத்திய அரசின் சார்பில் சட்டப்படி வழங்கப்படும் இழப்பீடாகும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் அந்தக் குடும்பத்திற்கு நிதி வழங்கவேண்டும் என்கிற இரக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு  இல்லையென்பது வேதனைக்குரியது.

இந்நிலையில், நீட் தேர்வை இனி எக்காலத்திலும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்  வரும் 9 ஆம் தேதி நீட் சட்ட நகல் எரிப்பு பேராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.