பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து புலம் பெயர்ந்தோருக்கும் வெண்டிலெட்டர் கருவி வாங்குவதற்கும் பிரதமர் மோடி நிதி ஒதுக்கியதை பாராட்டி வரவேற்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கையோடு ‘பி.எம்.கேர்ஸ்’ என்ற பெயரில் நிதி திரட்டும் திட்டத்தையும் பிரதமர் மோடி அறிவித்தார். ஏற்கனவே ‘பிரதமர் நிவாரண நிதி’ என்ற பெயரிலான நிதி திரட்டும் கட்டமைப்பு இருக்கும்போது, புதிதாக பி.எம்.கேர்ஸ் ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. மேலும் பி.எம்.கேர்ஸில் சேர்ந்த நிதியை புலம் பெயர்ந்தோர் சொந்த ஊருக்கு திரும்பக்கூட அந்த நிதியை ஏன் செலவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.


இந்நிலையில் புலம் பெயர்ந்தோர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையிலும் கொரோனா தடுப்பு மருத்து தயாரிக்கவும் பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து 3,100 நிதியை விடுவிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.3100 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மிகவும் தாமதமாக செய்யப்பட்ட அறிவிப்புதான் எனினும் இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடியாக நிவாரணம் அளிக்க மேலும் நிதியை இதிலிருந்து ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து வென்டிலேட்டர் வாங்குவதற்கு 2000 கோடி ரூபாயும், தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்காக 100 கோடி ரூபாயும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 1000 கோடி ரூபாயும் விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 2000 கோடி ரூபாயில் சுமார் 40,000 முதல் 50,000 வென்டிலேட்டர்களை வாங்க முடியும். இந்தியாவில் உயர்ந்துவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளும்போது இந்த முடிவு அவசியமானது. இதைப் பாராட்டி வரவேற்கிறோம். அதுபோலவே, கொரோனா நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதையும் வரவேற்கிறோம்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 1000 கோடி ரூபாயும் அவர்களது பயணச்செலவு, உணவு, அவர்களை தனிமைப்படுத்தித் தங்க வைப்பதற்கான செலவு ஆகியவற்றை சமாளிக்க மாநிலங்களுக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களாக வேலையும் இன்றி உணவுக்கு வழியும் இன்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பினாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட இருப்பதால் அவர்களது குடும்பத்தில் அதே வறுமை நிலைதான் நீடிக்கும். எனவே அவர்களது வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு நேரடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒரு தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.