ஆங்கிலப் புத்தாண்டு நாளின் நள்ளிரவில் எண்பது வயதைத் தாண்டிய ஒரு மூத்த அரசியல்தலைவரான நெல்லைக் கண்ணன் அவர்களைத் தமிழக அரசு கைது செய்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களையும் அவமதிக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் மேடையில் பேசினார் என்பதுதான் அவர்மீதான குற்றச்சாட்டு எனத் தெரியவருகிறது. 

அவருடைய பேச்சு சங் பரிவார்களைத் தோலுரிப்பதாக இருப்பதே அவருக்கு எதிரான கூச்சலுக்குக் காரணமாகும். தொடர்ந்து பாஜக அரசையும் சங்பரிவார்களையும் அவர் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திவருகிறார். ‘நான் இந்து அல்ல;  சைவ சமயத்தைச் சார்ந்தவன்’ என்று நெல்லை மாநாட்டில் அவர் பேசியது சனாதன சக்திகளை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  அது தான் அவர்களின் எரிச்சலுக்கு முதன்மையான காரணியாகும். 

‘அமித்ஷாவை ஜோலிய முடிச்சுட்டா எல்லாம் சரியாயிடும்’ என்று அவர் பேசியது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கான ஒன்று.  அம்மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களும் அப்படியே புரிந்துகொண்டு சிரித்தனர்.  அதில் வேறு உள்நோக்கம் எதுவுமில்லை.  அவரும் உள்ளார்ந்த வெறித்தனத்தோடு பேசவில்லை; பங்கேற்ற இஸ்லாமியர்களும் அதனைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவ்வாறு அதனைப் பொருட்படுத்துவதாக இருந்திருந்தால் ‘நாரே தக்பீர்’ என தன்னியல்பாக உரத்து முழங்கியிருப்பார்கள். மாறாக, அனைவரும் கொல்லென சிரித்துவிட்டு கடந்துபோய் விட்டனர்.

எனினும், பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பினர் இவ்வளவு ஆவேசம் காட்டுவதும் வெறிக்கூச்சலிடுவதும் அவருடைய ‘ ஜோலியை முடிக்கும்’ பேச்சுக்காக அல்ல என்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.  மோடி அரசின் மக்கள்விரோதப் போக்குகளையும் பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களின் சமூகவிரோத நடவடிக்கைகளையும் தனது உரையாற்றலால் தோலுரித்து அம்பலப்படுத்துகிறார் என்பதுதான் அவர்களின் ஆத்திரத்துக்குக் காரணமாகும்.

 

அத்துடன் அவர் இந்துமத( சைவ )அடையாளங்களுடன் இஸ்லாமியர்களிடையே பேசுகிறார் என்பது அவர்களுக்குக் கூடுதல் எரிச்சலைத் தருகிறது. இந்நிலையில், பாஜக மற்றும் சங்பரிவார்களின் கோரிக்கையை ஏற்று இரவோடு இரவாகக் கைதுசெய்து அவரைச் சிறைப்படுத்தியிருப்பது அதிமுக அரசு எந்த அளவுக்கு பாஜகவுக்கு பணிந்து பணிவிடை செய்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.  நெல்லைக்கண்ணன் அவர்கள் மீதான பொய்வழக்குகளைத் திரும்பப்பெறுவதுடன் அவரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமெனவும்  விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.