- Home
- Politics
- பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் மாடல் அரசு: 20 மாத ஏமாற்றம்..!
பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் மாடல் அரசு: 20 மாத ஏமாற்றம்..!
காலம் கடந்து வழங்கப்படும் நீதி, அநீதிக்குச் சமம். தேர்தல் கமிஷன் தனது அறிவிப்பை வெளியிடும் முன், தமிழக அரசு இந்த ஊழியர்களின் ஊதிய ஆணையை வெளியிடுமா?

வழங்கப்படாத ஊதிய ஆணை
தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் பல வகை சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவுத் துறையில் முதுகெலும்பாக விளங்குவது பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்கள். பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களை உறுப்பினராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1,617 சங்கங்கள், 15 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிதி ஆதாரமாகத் திகழ்கின்றன. ஆனால், இந்தச் சங்கங்களை இயக்கும் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரமோ இன்று கேள்விக்குறியாகி நிற்கிறது. ஊதியக் குழு அமைக்கப்பட்டு 20 மாதங்கள் கடந்தும், இதுவரை ஊதிய ஆணை வழங்கப்படாதது ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவிக்கவிடும் நிர்வாகம்
கூட்டுறவுத் துறையில் உள்ள மற்ற அனைத்துப் பிரிவு சங்கங்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டன. ஆனால், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க ஊழியர்களை மட்டும் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஊதிய ஒப்பந்தம், 2001-க்குப் பிறகு நியமிக்கப்பட்டவர்களின் பணி நிரந்தரம், கருணை ஓய்வூதியம் என இவர்களது கோரிக்கைகள் நியாயமானவை. இதற்காக கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் இவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாகவே ஊதிய நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அக்குழு அறிக்கை அளித்து பல மாதங்களாகியும், கோப்புகள் அமைச்சரின் அறையிலும் பதிவாளர் அலுவலகத்திலும் தூங்கிக் கொண்டிருப்பது ஊழியர்களை விரக்தியின் உச்சத்துக்கே தள்ளியுள்ளது.
அமைச்சரின் உறுதிமொழி வெறும் மேடைப் பேச்சா?
கடந்த டிசம்பர் 13-ம் தேதி சிவகங்கையில் நடந்த மாநில மாநாட்டில் பங்கேற்ற கூட்டுறவுத் துறை அமைச்சர், "உங்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும்" என மேடை அதிர உறுதி அளித்தார். ஆனால், அந்த உறுதிமொழி காற்றோடு போய்விட்டது. தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் தெரிவிப்பது போல, "அமைச்சரையும் பதிவாளரையும் பலமுறை சந்தித்தும் வெறும் ஆறுதல் வார்த்தைகளே மிஞ்சுகின்றன"
கடந்த வாரம் பதிவாளர் கொடுத்த "வார இறுதிக்குள் ஆணை வரும்" என்ற வாக்குறுதியும் இன்னும் நிறைவேறவில்லை. இது ஊழியர்களை ஏமாற்றும் நாடகமா? அல்லது நிர்வாகத் திறமையின்மையா?
தேர்தல் நெருங்கும் வேளையில் பதற்றம்
தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்ற சூழல் நிலவுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால், அடுத்த பல மாதங்களுக்கு எந்தவொரு அரசாணையும் பிறப்பிக்க முடியாது. இது தெரிந்தே அரசு காலம் தாழ்த்துகிறதா? என்ற சந்தேகம் ஊழியர்களிடையே வலுத்துள்ளது.
"எங்கள் குடும்பங்கள் இந்த ஆணையை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் இந்த ஆணை வராவிட்டால், அது இந்த அரசின் மீதான மிகப்பெரிய அதிருப்தியாக மாறும்" என ஊழியர்கள் எச்சரிக்கின்றனர்.
15 லட்சம் உறுப்பினர்களுக்குச் சேவை செய்யும் 2,000 ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 20 மாதங்கள் என்பது மிக நீண்ட காலம். மற்ற சங்கங்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை இவர்களுக்கு மறுக்கப்படுவது அநீதி. திராவிட மாடல் அரசு ஊழியர் நலனில் அக்கறை கொள்கிறது என்றால், அந்தத் தாயுள்ளம் இந்தச் சிக்கன நாணயச் சங்க ஊழியர்களின் மீதும் இறங்க வேண்டும்.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி, அநீதிக்குச் சமம். தேர்தல் கமிஷன் தனது அறிவிப்பை வெளியிடும் முன், தமிழக அரசு இந்த ஊழியர்களின் ஊதிய ஆணையை வெளியிடுமா? அல்லது அவர்களை மீண்டும் வீதிக்கு வரவழைக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
