கொரோனா சிகிச்சையில்  தனியார் மருத்துவமனைகளுக் குரிய கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது, இது குறித்து அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்;-   கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறியும் பரிசோதனையை தனியார் பரிசோதனை மையங்களும் இலவசமாகச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். சோதனை மட்டுமின்றி சிகிச்சையும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறியும் பரிசோதனையைத் தனியார் பரிசோதனை மையங்களும் மேற்கொள்ளலாம் அதற்கு ரூபாய் 4,500 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே ஆணையிட்டிருந்தது. ஆனால், பல்வேறு தனியார் சோதனை மையங்களில் 11 ஆயிரம் ரூபாய் வரை இதற்கு வசூல் செய்யப்பட்டு வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதனை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட பொதுநல வழக்கு மனு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், தனியார் மருத்துவமனைகளின் சோதனை மையங்கள் இலவசமாக இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும் என ஆணையிட்டுள்ளது. 

எனினும், இலவசமாக செய்யச் சொன்னால் அவை சோதனை செய்ய மறுப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே, ஒவ்வொரு சோதனைக்கும் குறைந்தபட்ச கட்டணம் ஒன்றை அந்த மையங்களுக்கு அரசு வழங்க முன்வரவேண்டும் என்று மைய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறோம்.  அதுமட்டுமின்றி, கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு தனியார் மருத்துவ மனைகள் கட்டணம் வசூலிக்காமல் மருத்துவம் செய்யும் வகையில், சிகிச்சைக்கான தொகையை மைய, மாநில அரசுகள் அந்தந்த மருத்துவமனைகளுக்கு அளிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.