திமுக தலைமையில் கொரோனா தொடர்பான அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தடை விதித்து நோட்டீஸு அனுப்பிய  தமிழகக் காவல்துறை மற்றும் தமிழக அரசின் எதேச்சாதிகார போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு தங்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம் என்ற விதத்திலேயே அண்மைக் காலமாக நடந்து வருகிறது.  தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படும் நிவாரண உதவிகளை தமிழக அமைச்சர்கள் மக்களுக்கு விநியோகித்து அதை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு உதவக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்தது.  அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதும் தனது நிலையை மாற்றிக்கொண்டு விளக்கமளித்தது.

கடந்த 11 ஆம் தேதி சனிக்கிழமையன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அப்படியிருக்கும்போது திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் மட்டும் நடைபெறக் கூடாது என்று தடை விதிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செய்வதற்கு ஏதுவாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பலமுறை தமிழக அரசை வலியுறுத்தி விட்டோம்.  'வீடியோ கான்ஃப்ரன்சிங்' மூலமாகக்கூட அனைத்துக்கட்சிக் கூட்டத்தைத் தமிழக முதல்வர் கூட்டியிருக்கலாம். பிரதமர் கூட மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை வீடியோ கான்ஃப்ரன்சிங்  மூலம் நடத்துகிற நிலையில் தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிகளின் கருத்தை கேட்க வேண்டும்; கொரோனா எதிர்ப்பில் அனைவரையும் ஈடுபடுத்தவேண்டும் என்ற ஜனநாயக அணுகுமுறை இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவது வேதனையளிக்கிறது.

தமிழக நலன்களுக்கு எதிரான பல முடிவுகளைத் தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்துக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள் முதலானவற்றைக் கூட தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்யக்கூடாது என்று மத்திய அரசு தடுத்திருக்கிறது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொழிற்சாலைகள் நிதி வழங்க கூடாது என்று தடை போட்டிருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எதையுமே தட்டிக் கேட்காமல் வாய்மூடி மவுனம் காக்கிறது தமிழக அரசு. தமிழகத்துக்கு  தரவேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியை கூட கேட்டுப் பெற முடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது. இதனால் தமிழக மக்களுடைய வாழ்நிலை  பேராபத்தில் சிக்கியிருக்கிறது. 

நேற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த நிவாரணங்கள் எந்தவிதத்திலும் மக்களுடைய துயர்துடைக்கப் போதுமானவையாக இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தால் இதையெல்லாம் சுட்டிக் காட்டுவார்கள், தீர்மானம் போடுவார்கள், அதனால் மக்கள் மத்தியில் தமிழக அரசினுடைய மெத்தனப்போக்குகள் அம்பலப்பட்டுப் போகும் என்ற அச்சத்தில் தான் இத்தகைய தடை விதிக்கப்படுகிறது என்று கருதுகிறோம். பேரிடர் காலத்தில் ஜனநாயகத்தை பரவலாக்குவதுதான் அதை வலிமையாக எதிர்கொள்வதற்கான வழிமுறையாக இருக்கும். அதை விடுத்து எதேச்சாதிகார அணுகுமுறையை கையாண்டால் மக்களுடைய உயிருக்குத்தான் அது உலைவைக்கும். தமிழக அரசு தனது போக்கை மாற்றிக் கொண்டு கொரோனா எதிர்ப்புப் போரில் அனைவரையும் ஒன்றிணைத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.