வெற்று உரைக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார் என நிதியமைச்சரின் அறிவிப்புகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் , பிரதமர்  தனது உரையில் 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் திட்டங்களை அறிவிப்பதாகவும் அதன் விவரங்களை நிதியமைச்சர் வெளியிடுவார் என்றும் கூறியிருந்தார். அதனால் நாடே நிதியமைச்சரின் அறிவிப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தது. இந்நிலையில் சிறு குறு தொழில்கள் தொடர்பான அறிவிப்புகளை இன்று நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார். பிற  அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்புகள் எவையும் உடனடியாக மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடியவையாக இல்லை.  பிரதமரின் வழக்கமான வெற்று உரைக்கு விளக்க உரையாக அமைந்துள்ளதே தவிர வேறேதும் இல்லை என்பதை  வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறோம். 

சிறு குறு தொழிற்சாலைகளில் வகைப்பாடு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது; 200 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளுக்கு அயல்நாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டிருக்கிறது; வாராக் கடன் நிலுவையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது; 3 இலட்சம் கோடி வரை புதிய கடன்கள் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் , இவை யாவுமே வங்கிகளின் மூலமாக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களாகும். வங்கிகள் மனம் வைத்தால்தான் இவற்றை செயல்படுத்த முடியும் என்ற நிலையில், அரசின் நிவாரண அறிவிப்புகளாக இவற்றை எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் மூலமாக அறிவிக்கப்பட்ட இத்தகைய நிவாரணங்கள் 25% கூட தொழில் நிறுவனங்களுக்குச் சென்று சேரவில்லை. எனவே இவை வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கக்கூடிய அறிவுப்புகளாகத் தெரிகின்றனவே தவிர கஷ்டப்படும் மக்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ உடனடியாக உதவக்கூடிய அறிவிப்புகள் இல்லை.

  

சிறு குறு தொழில் நிறுவனங்கள் புத்துயிர் பெறுவதற்கு முதலாளிகளின் விருப்பம் மட்டுமே போதாது, தொழிலாளர்களும் ஒத்துழைக்கவேண்டும். குறு நிறுவனங்கள் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களை நம்பித்தான் இயங்கி வருகின்றன. அவர்களெல்லாம் இன்றைக்குத் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கால்நடையாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்து கொண்டிருக்கிறார்கள். அதில் பலபேர் வழியிலேயே உயிரிழக்கும் பேரவலம் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொடுமைகளைப் பற்றியோ அவர்களுக்குத் தீர்வு அளிப்பது பற்றியோ நிதியமைச்சர் ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.மார்ச் மாத கடைசியில் நிதி அமைச்சர் அறிவித்த 1.76 லட்சம் கோடிக்கான நிவாரணங்களும் இதேபோலத்தான் வெற்று அறிவிப்புகளாக இருந்தன. அப்படி இந்த அறிவிப்புகளும் இருந்து விடுமோ என்ற அச்சத்தை, நிதி அமைச்சரின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு உறுதிப் படுத்தியிருக்கிறது. 

அணியும் கண்ணாடி முதல் எழுதும் பேனா வரைக்கும் அயல்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டும் பிரதமர் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்துங்கள் என்று  மக்களுக்கு அறிவுரை சொல்கிறார்.நாட்டின் பாதுகாப்பு  துறையைக்கூட நேரடி அன்னிய முதலீட்டுக்குத் திறந்துவிட்டுவிட்டு தற்சார்பு பொருளாதாரம் என வகுப்பெடுக்கிறார். எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். பேரிடர் காலத்தில்தான் ஒருவரின் நிர்வாகத்திறமையை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். நடந்து செல்லும்போதே விழுந்து செத்துக்கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்களோடு நமது ஆட்சியாளர்களின் மெத்தனமும் திறமையின்மையும் சேர்ந்து நாறிக்கொண்டிருக்கிறது. ஆள்வோர் இனியாவது தமது மக்கள்விரோதப் போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும். இல்லாவிடில், உரியநேரத்தில் மக்கள் இதற்கான தீர்ப்பை நிச்சயம் அளிப்பார்கள்.