ஒரே நாடு ஒரே மொழி என்ற திட்டத்தால்  நாட்டை துண்டாட நினைக்கிறார் உள்துறை அமைச்சர்  அமித்ஷா என  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். பெரியார் பிறந்த நாளான இன்று அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

பெரியாரின் பிறந்த நாளான இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் திருஉருவச்சிலைக்கு திமுக, திக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்.  “விடுதலைப்போராட்டத்தில் இந்தி பேசுகிறவர்கள் மட்டுமன்றி இந்தி அல்லாத பிறமொழி பேசுகிறவர்களும் தியாகம் செய்துள்ளனர்.அதாவது, தமிழ்,தெலுங்கு, மலையாளம், வங்கம், குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை பேசிய தேசிய இனங்களும் வெள்ளையர்களை எதிர்த்து போராடியுள்ளனர்.

 

இதை அமித்ஷா கும்பல் நினைவில் கொள்ளவேண்டும். அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் அவரின் செயல் உள்ளன. இந்தி படிப்பது கட்டாயம் என அவர் அறிவித்துள்ளது மற்ற மாநில மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது என அவர் கண்டித்தார். ஒரே நாடு ஒரே மொழி என்னும் முழக்கம் இந்தியாவை பல கூறுகளாக துண்டாக்கும் ஆபத்தான முயற்சியாகும்.
எனவே தேசிய அளவில் அனைத்து சனநாயக சக்திகளும் இதனை முறியடிக்க முன் வரவேண்டும்”
என திருமாவளவன் கூறினார்.