ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆனால்,  உருப்படியான நிவாரணத் திட்டம் எதுவும் இல்லாமல் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற எண்ணம் பரவலாக மக்களிடம் நிலவி வந்தது. ஒருசில மாநிலங்கள் அதற்கான அறிவிப்பை நான்கைந்து நாட்களுக்கு முன்பாகவே செய்துவிட்ட நிலையில், தமிழக அரசு மட்டும் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்ததைப்போல காலம் தாழ்த்தியது விமர்சனத்துக்குள்ளானது. தற்போது, பிரதமர் மோடி காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் பேசப் போகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ள நிலையில் அதற்கு முன்பாக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. 

ஆனால், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை விலையில்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது மே மாத்த்தில் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்பதை சூசகமாக உணர்த்தி உள்ளது. இதனை எப்படி  நிவாரணம் என்று ஏற்க முடியும்? மே மாதத்துக்கும் ரேசன் பொருட்களைக் கூடுதலாக வழங்கவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்! வெளிமாநிலங்களில் இருந்து இங்கே வந்து தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்குமாக சேர்த்து 15 கிலோ அரிசியும், பருப்பு எண்ணெய் தலா ஒரு கிலோவும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு 15 கிலோ என்றால் ஒரு நாளைக்கு அரை கிலோ அரிசி தான் வருகிறது. நிச்சயமாக அது அவர்களுக்குப் போதாது . பிற மாநிலங்களில் தங்கியுள்ள நம்முடைய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அந்த அரசுகள்  மிகச் சிறப்பான நிவாரணத்தை வழங்குகின்றன. எனவே வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் .

குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவ்வாறு செய்தால்தான் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் இந்த முழு அடைப்பில் தாக்குப்பிடிக்க முடியும்.  அவர்களுக்கு எவ்வித நிவாரண அறிவிப்பும் இல்லாமல் முழுஅடைப்பை நீட்டிப்பது பட்டினிச்சாவு களுக்கு வழிவகுக்கும்.எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்கும் வெளிமாநிலங்களைச்சார்ந்த  புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும்  போதிய நிவாரண அறிவிப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வலியுறுத்துகிறோம்!