நாங்குநேரி தொகுதியில் நான் செய்த பணிகள் காங்கிரஸுக்கு வெற்றியைத் தேடி  தரும் என்று கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யும் நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வசந்தகுமார் தெரிவித்துள்ளார். 
 நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக ரியல் எஸ்டேட் பிசினஸ்மேன் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமார் 2006, 2016 சட்டப்பேரவைத்  தேர்தலில் வெற்றி பெற்றவர். இந்நிலையில், “நாங்குநேரி தொகுதியின் என்னுடைய பணிகள் காங்கிரஸுக்கு வெற்றியைத் தேடி  தரும்” என்று வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
 “நாங்குநேரியில் எம்.எல்.ஏ.வாக 8 அண்டுகள் நான் செய்த பணிகளே ரூபி மனோகரனுக்கு வெற்றியைத் தேடி தரும். இந்தத் தொகுதியில் சீமகருவேல மரங்களை எர்த்மூவர் மூலம் அகற்றிய இந்தியாவின் ஒரே எம்.எல்.ஏ. நான்தான். வறட்சி பகுதியான நாங்குநேரியில் ஏராளமான கால்வாய்கள் தூர்வாரப்பட்டு  தண்ணீர் வர ஏற்பாடு செய்துள்ளேன். இதில் 95 சதவீத பணிகளை நானே முடித்துவிட்டேன். 5 சதவீத பணிகளை மட்டுமே ரூபி மனோகரன் செய்ய உள்ளார்.


2011 சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனிடம் வசந்தகுமார் தோல்வியடைந்தார். இதுபற்றிய கேள்விக்கு, “அப்போது வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவியது. அந்தத் தேர்தலில்  தவறான முடிவை மக்கள் எடுத்துவிட்டதை உணர்த்ததால்தான் 2016-ல் என்னை மீண்டும் தேர்வு செய்தனர்” என்று வசந்தகுமார் தெரிவித்தார்.