சிலை கடத்தல் வழக்கை திசை திருப்பவே அமைச்சர்கள் மீது பொன் மாணிக்கவேல் குற்றம்சாட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.  

ஒரு வழியாக ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்துக்கான சரியான இடத்துக்கே வந்துவிட்டார் சிலை கடத்தல் தடுப்பு காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல். இந்து அறநிலையத்துறையை அரசிடமிருந்து கைப்பற்றி இந்துத்துவக் கும்பலிடம் ஒப்படைப்பது தான் அந்த செயல் திட்டம். அந்த இடத்துக்கு பொன்.மாணிக்கவேல் நெருங்கிவிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.காதர்பாட்சா தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு வந்தது.
“சிலை கடத்தல் குற்றவாளி தீனதயாளனோடு சேர்ந்து என்னை பழிவாங்குகிறார். ஆகவே பொன்.மாணிக்கவேலு மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்” என்று அந்த மனுவில் காதர்பாட்சா கோரியிருந்தார். இந்த வழக்கில் உண்மையாகவே பொன்மாணிக்கவேலு மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதை புரிந்து கொண்ட அவர், அவசரம் அவசரமாக தன்னையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று மனு போட்டார்.

நேற்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. மனுதாரர் காதர்பாட்சாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் மீடியாக்களின் கவனத்தை திசை திருப்புவது போல ஒரு அதிரடி குண்டை வழக்கம் போல போட்டார் பொன்.மாணிக்கவேலு. அதாவது, “சிலை கடத்தல் வழக்கில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கிறது” என்பது தான் அந்த விளம்பர குண்டு. வழக்கிலிருந்து தப்பிக்க மட்டுமல்லாமல் ஆர்எஸ்எஸ் நினைத்த அரசியலுக்கும் வந்துவிடுகிறார் பொன்.மாணிக்கவேலு.

இதற்கு முன்பு, “சிலை கடத்தலுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு” என்று பாஜகவின் எச்.ராஜா குற்றம் சுமத்தியதற்கும் பொன்மாணிக்கவேலின் இந்த குற்றச்சாட்டுக்கும் ஒரு தொடர்பு உண்டு என்பதை நாமே அறியலாம். எவ்வாறு எனில், 1.உப்பு இருக்கான்னு கேட்டால் சர்க்கரை இருக்கிறது என்று கடைக்காரர் சொல்வதை போல, காதர்பாட்சா குறித்த குற்றச்சாட்டுக்கு தங்கள் பதில் என்னவென்று கேட்டால், அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்துவது ஏன்?

2.அமைச்சர்கள் மீதான குற்றச்செயலுக்கு ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்தில் சொல்வதன் ரகசியம் என்ன? 3. எல்லா கைது நடவடிக்கைகளையும் நீதிமன்றத்துக்கு கொண்டு போய் தான் கைது செய்தீர்களா? அப்படி சட்டத்தில் இடமிருக்கிறதா? இப்படி மக்களின் எந்த சந்தேகங்களுக்கும் பொன்.மாணிக்கவேலிடம் பதில் இருக்க வாய்ப்பில்லை. காரணம், இந்து அறநிலையத்துறை ஒரு ஊழல் மிகுந்த துறை என்றும் இதை நிர்வாகம் செய்ய இந்த அரசாங்கத்தால் முடியாது என்பதை நீதிமன்றத்தின் மூலம் மக்கள் மன்றத்தில் நாறடிப்பதற்கான திட்டம் தான் இந்த குற்றச்சாட்டு.

உண்மையாகவே சிலை கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பிருந்தால் கைது செய்வதை யாரும் தவறு சொல்ல மாட்டார்கள். ஆனால், பொன்.மாணிக்கவேலின் உள்நோக்கம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அல்ல. சமூகநீதியின் அடையாளமாக இருக்ககூடிய இந்து அறநிலையத்துறையை அரசிடமிருந்து பறித்து இந்துத்துவக் காவிக்கும்பலிடம் ஒப்படைப்பது தான் திட்டம். அதற்காக நீதிமன்றத்தையும்
ஏமாற்றதுணிந்து விட்டார் பொன்.மாணிக்கவேலு. நீதிமன்றம் ஆதாரங்களை ஒப்படைக்க ஆகஸ்டு 6 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது.

கடந்த நவம்பர் 11, 2018 அன்று பணி ஓய்வு பெற இருந்து பொன்.மாணிக்கவேலுக்கு ஓராண்டு பணி நீடித்து உத்தரவிட்டது நீதிமன்றம். அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை ஒப்படைக்க இன்னும் ஓராண்டு நீட்டிப்பு கேட்டாலும் கேட்பார் போல. ஆர்எஸ்எஸ் கும்பலின் திட்டம் வெற்றி பெறும் வரை பொன் மாணக்கவேலு இன்னும் என்ன என்ன குண்டுகளை வீசப்போகிறாரோ? முதல்வர் எடப்பாடி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? ஏனென்றால் முதல்வரின் அமைச்சரவையில் கடத்தல் பேர்வழிகள் இருப்பதாக குற்றம் சுமத்தி உள்ளார்.

மானமென்னும் வேட்டியை உருவ முயற்சிக்கும் பொன்மாணிக்கவேலு மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது வழக்கம் போலத்தானா?’’ என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.