வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி பாமக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. அன்புமணி முதல்வரிடம் இதுபற்றி மனு அளித்த நிலையில், அதனை ஏற்று ஏற்று முதற்கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.

இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை என விமர்சித்த பாமக நிறுவனர் ராமதாஸ், இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் தானே போராட்டத்தில் கலந்துகொள்வேன் என அரசுக்கு எச்சரித்தார். இதனிடையே வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு தரக்கூடாது எனவும், அப்படி தந்தால் அது மற்ற சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டை பாதிக்கும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாக செய்திகள் வெளியானது. இதனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பக்கத்தில்;- வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.